சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக ராகுலை கடுமையாக விமர்சித்த கங்கனா ரனாவத்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாஜக எம்பி கங்கனா ரனாவத், ‘மார்பிங்’ புகைப்படம் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 30-ம் தேதி மக்களவையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் பாஜக எம்பி அனுராக் தாக்குருக்கும் இடையே கடுமையான வாதம் நடைபெற்றது. அப்போது தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். அனுராக் தாக்குர் கூறும்போது, “சாதி தெரியாதவர்கள்,சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள்’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பின்னர் விளக்கம் அளித்த அனுராக் தாக்குர், “நான் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை.பொதுவான அடிப்படையில் கருத்தை கூறினேன்’’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக அசாம் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் அண்மையில் வெளியிட்ட பதிவில், “சாதியை பற்றி கேட்காமல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை ராகுல் காந்தி நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்’’ என்று விமர்சித்தார்.

இதே விவகாரம் தொடர்பாக பாஜக எம்பியும் நடிகையுமான கங்கனா ரனாவத் அண்மையில் வெளியிட்ட பதிவில், “ராகுலுக்கு அவருடைய சாதி தெரியாது. அவரது தாத்தா முஸ்லிம். பாட்டி பார்சி, அம்மா கிறிஸ்தவர். ஆனால் அவர் அனைவரின் சாதியை அறிந்து கொள்ள விரும்புகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது சமூக வலைதளத்தில் ராகுல் காந்தியின் ஒரு ‘மார்பிங்’ புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில், ராகுல் காந்திக்கு குல்லா அணிவிக்கப்பட்டு, நெற்றியில் மஞ்சள், குங்குமம் பூசி, கழுத்தில் சிலுவை தொங்கவிடப்பட்டு இருக்கிறது. புகைப்படத்தின் அடிக்குறிப்பில், “சாதியின் பெயரைக் கேட்காமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த இவர் விரும்புகிறார்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version