கீழ்த்தரமான அரசியலை விட்டுவிட்டு விவசாயிகளை முன்னேற விடுங்கள் : பிரதமர் மோடி

மத்தியபிரதேசத்தில் உள்ள பல்வேறு இடங்களில், இன்று, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீடியோ கான்பரென்சிங் மூலமாக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது உரையாற்றிய பிரதமர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அளித்த வாக்குறுதியை தான், தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது என்றும், அதற்கான நற்பெயரை எதிர்கட்சிகள் எடுத்துக் கொண்டு, அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை குழப்பாமல், விவசாயிகளை முன்னேற விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இன்று இந்த சட்டங்களை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில், இந்த சட்டங்களை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்திருந்தனர் என்றும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் பிரச்சனையில் இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் (Congress), அவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது என்றார். 

மத்திய அரசு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறது என்றும் புதிய வேளாண் சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்களது உற்பத்தியை எங்கு விற்கலாம் என  முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கியுள்ளது என்றும் கூறினார். மேலும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராகவே உள்ளது என்றார்.

விவசாயிகள் தற்கொலையை தடுக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்றும், இந்த சட்டம் இரவோடு இரவாக கொண்டுவரப்படவில்லை,  மாநில அரசுகள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் வேளாண் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு தான் கொண்டுவரப்பட்டது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். 

புதிய வேளாண் சட்டங்கள் (New Farm Laws) குறித்து தவறான தகவல்களை பரப்புவதை, எதிர்க்கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சட்டத்தில் உள்ள அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version