மோடி போல் ஸ்டாலினும் தமிழ் வளர்க்க வேண்டும்! தமிழக கவர்னர் விருப்பம்…

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின், கவர்னர் ரவி கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய கவர்னர் ரவி தமிழில் வாழ்த்து கூறி உரையாற்றினார். வரலாற்று தொன்மையும், இலக்கிய வளமையும் மிகுந்தது, தமிழ் மொழி. உலகில் உயிர்ப்புடன் இருக்கும் தொன்மையான மொழிகளில் மிக பழமையானது தமிழ்தான் என பிரதமர் மோடி எப்போதும் சொல்வார் என்று சுட்டிக்காட்டினார்.

பழமையான தமிழ்மொழி, தமிழகத்திற்கு அப்பால் ஆழமாகவும், அகலமாகவும் பரவி வேர் பிடிக்க வேண்டும். எங்கெல்லாம் தமிழ் நுழையவில்லையோ அங்கெல்லாம் அதை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என தெரிவித்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி பெயரில் தமிழ் இருக்கையை, பிரதமர் மோடி அமைத்தார். தமிழை பரப்ப முயற்சி எடுத்தார். இதேபோல் தமிழகத்துக்கு வெளியே பிற மாநிலங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும் என கவர்னர் ரவி வேண்டுகோள் விடுத்தார்.

உலகளவில் செல்வாக்கு மிகுந்த நாடாக இந்தியா வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்திய அளவில் தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பானது. குறிப்பாக கல்வி, மருத்துவம், தொழில் துறையில் நம் மாநிலம் அசாத்திய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த தேசத்தை முன்னின்று வழிநடத்தும் தகுதி தமிழகத்துக்கு உண்டு என்று கவர்னர் ரவி பேசினார்.

Exit mobile version