தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை.
ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின் (2012) தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள், ஆசியான் – இந்தியா பேச்சுவார்த்தையின் உறவின் 25-வது ஆண்டு நிறைவைக் (2018) குறிக்கும் வகையில், நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டின் தில்லி பிரகடனம், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையில் ஒத்துழைப்பதற்கான ஆசியான் – இந்தியா கூட்டறிக்கை (2021), ஆசியான் – இந்தியா விரிவான பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு கூட்டறிக்கை (2022),
கடல்சார் ஒத்துழைப்புக்கான ஆசியான் – இந்தியா கூட்டறிக்கை (2023) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதற்கான ஆசியான் – இந்தியா தலைவர்களின் கூட்டறிக்கை 2023 உட்பட ஆசியான் – இந்தியா அமைப்பு 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, அடிப்படைக் கொள்கைகள், பகிர்ந்துகொள்ளப்பட்ட நன்மதிப்புகள் மற்றும் விதிமுறைகளின் வழிகாட்டுதலுடன்,
இந்த அமைப்பை வழிநடத்திச் செல்லும் ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உத்தரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொது கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், உள்ளடக்கிய தன்மை, திறமை மற்றும் பொதுச் சேவை வழங்குவதில், புதுமைகளை ஊக்குவிப்பதுடன் தனிநபர்கள், சமுதாயங்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பதை ஏற்கிறோம்.
இந்தப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் டிஜிட்டல் பிளவுகளை ஒன்றிணைப்பதற்கு விரைவான மாற்றத்தைத் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்த முடியும் என்பதையும், உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் அதே வேளையில் பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதையும் அங்கீகரிக்கிறோம்
ஆசியான் டிஜிட்டல் பெருந்திட்டம் 2025-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான இந்தியாவின் பங்களிப்பு, அறிவாற்றல் பகிர்வு மற்றும் திறன் உருவாக்க நிகழ்ச்சிகள் வாயிலாக ஆசியான் – இந்தியா டிஜிட்டல் வேலைத்திட்டத்தின் அடுத்தடுத்த கூட்டு செயல்பாடுகளின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் கம்போடியா, லாவோஸ், மியான்மர் & வியட்நாம் நாடுகளில் மென்பொருள் வளர்ச்சி மற்றும் பயிற்சிக்கான உயர் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்படுவதைப் பாராட்டுகிறோம்.
டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு முன்முயற்சிகளை தயாரித்து நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் தலைமைப் பண்பு மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்றுக் கொள்கிறோம். இவை சமூகம் மற்றும் பொருளாதார ரீதியாக குறிப்பிடத்தக்க பலனை அளிக்கும். ஆசியான் டிஜிட்டல் பெருந்திட்டம் 2025-ன் சாதனைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஆசியான் டிஜிட்டல் பெருந்திட்டம் 2026 – 2030-ன் வளர்ச்சியை ஏற்றுக் கொள்கிறோம்.
இது ஆசியான் நாடுகளில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துவதோடு 2030-க்குள் டிஜிட்டல் முன்னேற்றத்தின் அடுத்தக் கட்டத்திற்கு தடையின்றி கடந்து செல்ல வழி வகை செய்வதோடு ஆசியான் சமுதாய தொலைநோக்கு 2045-ன் பொதுவான குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆசியான் நாடுகளின் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தும் டிஜிட்டல் எதிர்காலத்திற்குத் தேவையான ஆசியான் – இந்தியா நிதியத்தை அமைத்ததற்காக இந்தியாவை பாராட்டுகிறோம்.
கீழ் காணும் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இதன் மூலம் உறுதி அளிக்கிறோம்:டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பு,இந்தப் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொது கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்கான பல்வேறு வகையான தளங்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் பொதுக் கட்டமைப்புகளின் உருவாக்கம், நடைமுறைப்படுத்துதல் மற்றும் ஆளுகையில் சிறந்த நடைமுறைகள், அறிவாற்றல் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள,ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியாவின் பரஸ்பர ஒப்புதலுடன் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் கூட்டு முயற்சிகள் மற்றும் திட்டங்களுக்கான சாத்தியமான வாய்ப்புகளை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
கல்வி, சுகாதாரச் சேவை, வேளாண்மை மற்றும் பருவநிலை மாற்ற செயல்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் நிலவும் பல்வகையான சவால்களை எதிர்கொண்டு டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பை ஊக்குவிப்பதில், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும்.
நிதித் தொழில்நுட்பம்,
நிதித் தொழில்நுட்பம் மற்றும் புதுமை முயற்சிகள் இருதரப்புப் பொருளாதார ஒத்துழைப்புக்கு முக்கிய உந்துசக்தியாக திகழும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் :
நமது நோக்கம்:
இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் கிடைக்கக் கூடிய டிஜிட்டல் சேவைகளுக்கு வழிவகுக்கும் புதுமையான டிஜிட்டல் தீர்வுகள் வாயிலாக, ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவிற்கிடையேயான பணப்பட்டுவாடா முறைகளை எல்லை தாண்டி இணைப்பதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.
நிதித் தொழில்நுட்பப் புதுமைக்கான தேசிய அமைப்புகளிடையேயான ஒத்துழைப்பை ஆராய்வதுடன், டிஜிட்டல் நிதித் தீர்வு உள்ளிட்ட டிஜிட்டல் தீர்வுகளையும் ஆராய வேண்டும்.
இணையப் பாதுகாப்பு:
இணையப் பாதுகாப்பின் ஒத்துழைப்பை நாம் அங்கீகரிப்பது, நமது விரிவான உத்திகளின் ஒத்துழைப்பின் முக்கிய அம்சமாகும்.
ஆசியான் – இந்தியா ட்ராக் 1 இணையக் கொள்கை பேச்சுவார்த்தை மேற்கொள்வதை நாம் வரவேற்பதோடு இதன் முதல் கூட்டம் இந்த ஆண்டு அக்டோபரில் நடைபெறுவதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறோம்.
டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஆதரவளித்த நமது இணையப் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நாம் திட்டமிட்டிருக்கிறோம். வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாம் படிப்படியாக முன்னேறிச் செல்லும் வேளையில், டிஜிட்டல் கட்டமைப்பு மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் எழுச்சியை உறுதி செய்வது நமது கடமையாகும்.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான சாத்தியக் கூறுகளை பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளை திறமையாகவும், பொறுப்புள்ள வகையிலும் ஊக்குவிப்பதற்குத் தேவையான அறிவாற்றல், திறன், கட்டமைப்பு, நெருக்கடி மேலாண்மைக்கான விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை வகுப்பதில் ஒத்துழைப்பதை நாம் ஆதரிக்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு வாயிலாக நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கு, கணிப்பு, தரவு நிர்ணயம் மற்றும் அடிமட்ட அளவிலான மாதிரிகள் முக்கியம் என்பதோடு நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை அணுகுவதை நாம் அங்கீகரிக்கிறோம். எனவே, அந்தந்த நாட்டின் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப சமூக நலனுக்காக, செயற்கை நுண்ணறிவு வளங்களை ஜனநாயகப்படுத்துவதில் நாம் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்பு நிலைமையை வேகமாக மாற்றி வருவதை நாம் ஏற்றுக் கொள்ளும் வேளையில், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் திறன் பயிற்சி அளிப்பது அவசியம். செயற்கை நுண்ணறிவு கல்வி முன்முயற்சியில் திறன் உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப தொழிலாளர்களைத் தயார்படுத்துவதற்கான அறிவாற்றல் பரிமாற்றத்திற்கான அமைப்புகளை உருவாக்கத் தேவையான ஒத்துழைப்புக்கு நாம் ஆதரவளிக்கிறோம்.
நேர்மையான, அதிக அளவிலான சம வாய்ப்புடைய அணுகுதல் போன்றவற்றின் சாதனைகளுக்கு ஆதரவளித்து மதிப்பிடுவதற்கான ஆளுகை, தரம் மற்றும் சாதனங்கள் சார்ந்த படிப்புகளை உருவாக்குவதில் ஒத்துழைத்து செயல்படுவதை நாம் வரவேற்பதுடன், செயற்கை நுண்ணறிவு நடைமுறை மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்த, பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவுக்கான பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிற கொள்கைகளையும் நாம் வரவேற்கிறோம்.
திறன் உருவாக்கம் மற்றும் அறிவாற்றல் பகிர்வு
ஆசியான் – இந்தியா டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தை அடிக்கடி நடத்துவது பயிலரங்குகள், கருத்தரங்குகள், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கு உதவும் நோக்கிலான அம்சங்களில் கவனம் செலுத்துவதற்கான திறன் உருவாக்க பயிற்சிகள் உள்ளிட்ட தற்போது செயல்பாட்டில் உள்ள நடைமுறைகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது தேவைக்கு ஏற்ப டிஜிட்டல் பொதுக்கட்டமைப்பு உள்ளிட்ட அந்தந்த நாடுகளின் டிஜிட்டல் தீர்வுகளை பரஸ்பரம் அறிந்து, பின்பற்றுவது குறித்த அறிவாற்றலைப் பகிர்ந்து கொள்வதை நாம் ஆதரிக்கிறோம்.
நிலைத்தன்மை வாய்ந்த நிதியுதவி மற்றும் முதலீடு
தொடக்க நிலை செயல்பாடுகளுக்கு இந்த ஆண்டு தொடங்கப்பட உள்ள டிஜிட்டல் எதிர்காலத்திற்கான ஆசியான் – இந்தியா நிதியத்தின் கீழ் நிதியுதவி அளிக்கும் அதே வேளையில், அரசு -தனியார் ஒத்துழைப்புகள், சர்வதேச அளவில் நிதியுதவி அளித்தல் மற்றும் புதுமையான நிதியுதவி மாதிரிகள் உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளுக்கான நிதியுதவிக்குத் தேவையான நடைமுறைகளை நாம் ஆராய வேண்டும்.
செயல்பாட்டு நடைமுறை
இந்த கூட்டறிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதை பின்தொடர்ந்து கவனிக்குமாறு ஆசியான் – இந்தியா நாடுகளின் சம்பந்தப்பட்ட அமைப்புகளை அறிவுறுத்துவதோடு, டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்ல ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியா இடையேயான ஒத்துழைப்பையும் உறுதி செய்ய வேண்டும்.