அண்ணாமலை செய்தது சரியே
கருத்து சுதந்திரம் ஒரு வழிப்பாதை அல்ல
“மழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிதியிலிருந்து மத்திய அரசு 3000 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. ஆனால், தமிழகத்தை புறக்கணித்தது” என்ற செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டது.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “இது தவறான செய்தி. ஏற்கனவே மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது’ என்று, தக்க ஆதாரங்களோடு பதிவிட்டு, ‘புகழ்மிக்க டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் இந்த நிருபர், பல மாதங்களாக பல்வேறு செய்திகளை பாஜகவுக்கு எதிராக உள்நோக்கத்தோடு திரித்து வெளியிட்டு வருகிறார். ஆகவே, டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஆய்வு செய்து செய்திகளை வெளியிட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
அவசர தேவைக்காக மாநில பேரிடர் நிதி மற்றும் தேசிய பேரிடர் நிதியிலிருந்து ஏற்கனவே தமிழகத்திற்கு நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலே குறிப்பிட்ட 3000 கோடி ரூபாய் நிதியானது, மே முதல் செப்டம்பர் வரையில், ஆறு மாநிலங்களுக்கு, பேரிடர் நிவாரண குழுக்கள் அளித்த ஆய்வறிக்கையின் படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், உரிய நிதி தமிழகத்திற்கு வழங்கப்படும். இதை புரிந்து கொள்ளாமல் தவறான செய்தியை வெளியிட்டிருக்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
அண்ணாமலையின் விமர்சனம் தவறு என்றும், ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்றும், தனிப்பட்ட முறையில் நிருபர்களை விமர்சனம் செய்கிறார் என்றும் சிலர் சொல்வது முறையன்று. ஊடகவியலாளர்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றால், அரசியல் தலைவர்களுக்கு அந்த சுதந்திரம் இல்லையா?
‘நாங்கள் எங்களுக்கு தோன்றியதை, எங்களுக்கு தெரிந்ததை எழுதுவோம், ஆனால், அதை தவறு என்று சொல்லக்கூடாது’ என்ற சிலரின் பிடிவாதம் ஏற்புடையது அல்ல. மத்திய பாஜக அரசை குறை கூற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, உண்மைக்கு புறம்பான தகவலைகளை பொதுவெளியில் வெளியிட்டால், அதை மறுத்து, உண்மையை உலகிற்கு சொல்லும் பொறுப்பு பாஜகவின் மாநில தலைவருக்கு உள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்து உண்மையை உலகிற்கு எடுத்து சொல்வதே, பொறுப்பான ஊடகவியலாளரின் கடமை.
ஒவ்வொரு மனிதனுக்கும் கொள்கைகள் வேறுபடலாம். ஆனால், ஒரு பத்திரிகையாளர், விருப்பு, வெறுப்புகளை புறந்தள்ளி, உண்மையான செய்திகளை மக்களிடத்தில் சென்றடையச் செய்வதன் மூலம் மட்டுமே ஊடக அறத்தை காக்க முடியும். அதை விடுத்து, அண்ணாமலை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார், மிரட்டுகிறார் என்று சொல்வது ஜனநாயகம் அல்ல. அண்ணாமலை, பாஜகவின் மாநிலத் தலைவர். கட்சி குறித்தோ, ஆட்சி குறித்தோ உண்மைக்கு புறம்பான தகவல்கள் வருமாயின், அவற்றை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும், உரிமையும் அவருக்கு உள்ளது.
இதை புரிந்துகொள்வதோடு, பேச்சுரிமை, கருத்துரிமை என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பதை உணர்வார்களா, தொடர்புடைய ஊடகவியலாளர்கள்?
- நாராயணன் திருப்பதி -பாஜக செய்தித் தொடர்பாளர்