மோடி 3.0 அரசின் ஓராண்டு நிறைவில் பல தசாப்தங்களாக தொடரும் நக்சல் கிளர்ச்சியை வேரறுக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டில் இடதுசாரி தீவிரவாதத்தை (LWE) மார்ச் 31, 2026-க்குள் முற்றிலுமாக ஒழித்துக்கட்டப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். நாட்டின் இதயப்பகுதியையே அச்சுறுத்தி வரும் இந்த கிளர்ச்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தின் வெளிப்பாடாக இந்த அறிவிப்பு அமைந்தது.
இந்த இலக்கை அடையும் நோக்கில், பாதுகாப்புப் படைகள் கடந்த ஓராண்டில் நக்சல்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, மாவோயிஸ்டுகளின் கடைசி கோட்டைகளாகக் கருதப்படும் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசாவின் சில பகுதிகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
சத்தீஸ்கரில் உள்ள பீஜப்பூர்-சுக்மா-தண்டேவாடா பகுதி, மாவோயிஸ்டுகளின் வலுவான பிடியில் இருந்தது. தற்போது, தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், புதிய முன்னணி ராணுவ முகாம்களின் கட்டுமானம் மற்றும் மேம்பட்ட சாலை வசதி ஆகியவற்றின் உதவியுடன் பாதுகாப்புப் படைகள் இந்தப் பகுதிகளுக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.
சத்தீஸ்கரில் மட்டும், 2025-ஆம் ஆண்டின் முதல் 5 மாதங்களில் பாதுகாப்புப் படையினர் 209 மாவோயிஸ்டுகளைக் கொன்றுள்ளனர். 2024-ஆம் ஆண்டு முழுவதும் இந்த எண்ணிக்கை 219 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 2023-ல், நாடு முழுவதும் 53 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் முக்கிய மாவோயிஸ்ட் தளபதிகளும் அடங்குவர். குறிப்பாக, மே 21 அன்று அபுஜ்மத் காடுகளில் சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவராஜு கொல்லப்பட்டது மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
அரசாங்கத்தின் வலுவான அரசியல் உறுதிப்பாடு, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையிலான துல்லியமான நடவடிக்கை, மத்திய மற்றும் மாநில அமைப்புகளுக்கு இடையேயான மேம்பட்ட ஒருங்கிணைப்பு, மற்றும் சத்தீஸ்கரின் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் (District Reserve Guards) போன்ற மாநிலப் படைகள் நடவடிக்கைகளுக்குத் தலைமை ஏற்பதுமே இந்த சமீபத்திய வெற்றிகளுக்கு முக்கிய காரணம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவால்களும் பின்னடைவுகளும்
இருப்பினும், சில பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன. ஜார்க்கண்டின் கோல்ஹான் மற்றும் சத்தீஸ்கரின் அபுஜ்மத் போன்ற இடங்களில் மாவோயிஸ்டுகள் நடத்திய திடீர் தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினர் சிலர் உயிரிழந்துள்ளனர். இது, தங்களின் வலுவான பகுதிகளில் மீண்டும் தாக்குதல் நடத்தும் திறன் நக்சல்களிடம் இன்னும் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் எஞ்சியுள்ள பகுதிகளில் தொடர் அழுத்தத்தைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அப்பகுதிகளுக்கு ஆளுகை மற்றும் உள்கட்டமைப்பு வசதி சென்றடைவதை உறுதி செய்வதும் எதிர்காலத்திற்கான முக்கிய சவாலாக உள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவாக்கம்:
‘மோடி 3.0’ அரசின் மிக முக்கியமான முடிவுகளில் ஒன்றாக, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த விரிவாக்கத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இந்தியர்களும், அவர்களின் வருமானம் அல்லது சமூக நிலையைக் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.
2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட PM-JAY, மோடி அரசாங்கத்தின் சுகாதாரத் துறையில் முதன்மைத் திட்டமாகும். இந்த விரிவாக்கத்திற்கு முன்பே, இது உலகின் மிகப்பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமாக விளங்கியது. இத்திட்டம், இந்தியாவில் பொருளாதாரத்தில் மிக பின்தங்கிய 40% குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்கி வந்தது.
தற்போது, மூத்த குடிமக்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், வரும் 10 ஆண்டுகளில் இந்தியா சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றான முதியோர் நலன் சார்ந்த பிரச்னையை மத்திய அரசு முன்கூட்டியே கையாளத் தொடங்கியுள்ளது.
அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
அரசாங்கத்தின் “இந்தியாவில் நீண்டகால வயது முதிர்வு ஆய்வு” (Longitudinal Ageing Study in India) அறிக்கையின்படி, நாட்டில் மூத்த குடிமக்களின் (60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) எண்ணிக்கை 2011-ல் 10.3 கோடியாக இருந்தது, 2050-ல் 31.9 கோடியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 8.6%-லிருந்து 19.5% ஆக அதிகரிக்கும்.
“இந்தியா வயது முதிர்வு அறிக்கை 2023” (India Ageing Report 2023)-ன் படி, இந்த முதியோர் மக்கள் தொகையில் வெறும் 20%-க்கும் அதிகமானோர் மட்டுமே அரசு, தனியார் நிறுவனம் அல்லது தனிநபர் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பாதுகாப்புப் பெற்றிருந்தனர். இந்த புதிய விரிவாக்கம், கோடிக்கணக்கான முதியோரின் மருத்துவச் செலவுகளுக்கு ஒரு பெரிய ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
உட்கட்டமைப்பில் முன்னேற்றம்:
நாட்டின் உள்கட்டமைப்பை, குறிப்பாக கிராமப்புறங்களில் வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், கிராமப்புற வீட்டு வசதி, சாலை இணைப்பு மற்றும் விவசாயத் துறையில் நவீனமயமாக்கல் ஆகியவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமப்புறம் (PMAY-G) திட்டத்தை 2029-ம் ஆண்டு வரை நீட்டிக்க கடந்த ஆண்டு அரசு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், இத்திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி வீடுகளைக் கட்டுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக, மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு ₹34,000 கோடியை விடுவித்துள்ளதுடன், 84.45 லட்சம் வீடுகளுக்கான ஒதுக்கீட்டிற்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா-IV (PMGSY-IV) திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 2028-29 ஆம் ஆண்டுக்குள், நாடு முழுவதும் 25,000 கிராமங்களை அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சாலைகள் மூலம் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.
விவசாயத் துறையை நவீனமயமாக்கும் விதமாக, ‘டிஜிட்டல் விவசாய இயக்கம்’ (Digital Agriculture Mission) என்ற புதிய திட்டத்தை கடந்த செப்டம்பர் மாதம் அரசாங்கம் தொடங்கியது. இந்த குடை திட்டத்தின் பல்வேறு அம்சங்களுக்காக ₹2,817 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கங்களில், விவசாயத் துறைக்கென ஒரு டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (Digital Public Infrastructure – DPI) உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் பொது பயிர் மதிப்பீட்டுக் கணக்கெடுப்பை (Digital General Crop Estimation Survey – DGCES) செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும். இது விவசாயிகளுக்கு துல்லியமான தகவல்களை வழங்கி, அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும்.
11 ஆண்டுகளுக்கு முன் 686 கோடி ரூபாயாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி, இந்த ஆண்டு 23,000 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. சுமார் 90க்கும் மேற்பட்ட நாடுகள், இப்போது இந்தியாவின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைத் தங்கள் ஆதாரமாக அமைத்துக் கொண்டுள்ளன. பிரதமர் மோடி, இந்தியாவுக்கு மட்டும் பாதுகாவலாக இல்லாமல், உலகத்துக்கே பாதுகாவலாக உள்ளார் என்பதையே இது காட்டுகிறது. தொலைநோக்கு பார்வை,உறுதியான கொள்கை முடிவு, உலகளாவிய அந்தஸ்தில் அசைக்க முடியாத உயர்வு என ஓராண்டுக்குள் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை நாடு அடைந்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் 11-வது இடத்திலிருந்த இந்தியா, 4 ட்ரில்லியன் பொருளாதாரத்துடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 700 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளன.
2011-12 ஆம் ஆண்டில் 27.1 சதவீதமாக இருந்த வறுமை தற்போது ஐந்து சதவீதமாகக் குறைந்துள்ளது. குறிப்பாகக் கிராமப் புறங்களில் வறுமை 7.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. சொல்லப்போனால் 27 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, 12 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப் பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் சுகாதார காப்பீடு வழங்குகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நாடு தழுவிய சாதி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தைரியமாகப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்குப் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்து, அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. உறுதியான, கூர்மையான, லட்சியத்தில் தடுக்க முடியாத மோடி 3.0, நிர்வாக விதிகளைக் கச்சிதமாக எழுதுகிறது; தேசியப் பாதுகாப்பை மறுவரையறை செய்கிறது; துணிச்சலான சீர்திருத்தங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய வாதத்துடன் பாரத பாரம்பரியத்தை மீட்டெடுக்கிறது; இந்தியாவின் உன்னதமான எதிர்காலத்தைப் படைக்கிறது.