தமிழர்களை வஞ்சிப்பது மத்திய அரசா? தமிழக அரசியல்வாதிகளா?

கடந்த 04/08/2020 அன்று திருச்சி பொன்மலையில் ரயில்வே பணிக்கு வடமாநிலங்களில் இருந்து சான்றிதழ் சரிபார்க்க சுமார் 500 பேர் பணி வந்தனர் என்றும், தமிழர்களை புறக்கணிக்கும் முயற்சியே இது என்றும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன.

பல எதிர்க்கட்சிகள் இது குறித்து தங்களின் கண்டனத்தை பதிவு செய்ததோடு மத்திய அரசின் தமிழ் விரோத போக்கு இது என்ற ரீதியில் அறிக்கையை விட்டு அகமகிழ்ந்து கொண்டனர்.

ஆனால் உண்மை நிலவரம் என்ன?

03/02/2018 (CEN No.01/2018) அன்று நாடு முழுவதும் உள்ள 21 ரயில்வே பணியாளர் தேர்வாணையங்களின் அறிவிக்கையின் படி உதவி ஓட்டுனர்கள் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்களுக்கான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன் படி, உதவி ஓட்டுநர் பணிக்கு தொழில் நுட்ப கல்வி அல்லது டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். தொழில் நுட்ப பணியாளர் தேர்வுக்கு குறிப்பிட்ட பிரிவில் தொழில் நுட்ப கல்வி சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தகுதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கு எங்கு விருப்பமோ, அந்த மண்டலத்திற்கு மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மண்டலத்தில், சென்னை, திருச்சி மற்றும் சேலம் பிரிவுகள் உள்ளன. உதவி ஓட்டுநர் தேர்வுக்கு மூன்று நிலை தேர்வுகளும், தொழில் நுட்ப பணிக்கு இரு நிலை தேர்வும் நடைபெற்றன.

இந்த மண்டலத்தில், மொத்தமுள்ள 3218 க்கான காலியிடங்கள் உள்ளன. அதில் 752 உதவி ஓட்டுநர்களுக்கான பணியிடங்களுக்கும், 2466 இடங்கள் தொழில் நுட்ப பணியாளர்களுக்குமானவை.

கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதனடிப்படையில், பொன்மலை பிரிவில் தேர்வு செய்யப்பட்டது 541 தொழில் நுட்ப பணியாளர்கள் மட்டுமே. கடந்த 04/08/2020 முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வெளி மாநிலத்திலிருந்து அழைக்கப்பட்டார்கள்.

04/08/2020 அன்று அழைக்கப்பட்டவர்கள் 114 பேர் மட்டுமே. அதிலும் வந்தவர்களின் எண்ணிக்கை 63 மட்டுமே. ஆனால் 500 பேர் வந்ததாக செய்திகள் வெளியிடப்பட்டது.

அதிக எண்ணிக்கையில் வடமாநிலத்தவர்கள் தேர்வு பெற்றதாக சொல்லப்படுவது உண்மையா?

சென்னை மண்டலத்தின் உதவி ஓட்டுனர்கள் பணியிடங்கள் 752. அதில் தமிழகத்தை சார்ந்தவர்கள் மட்டும் 402 பேர். அதாவது சுமார் 53 விழுக்காடு. காரணம் இவர்களில் பலர் பொறியியல் பட்டதாரிகள். தொழில் நுட்ப பணியாளர்கள் தேர்வில் தகுதியானவர்கள் எண்ணிக்கை 2466. இதில் தமிழகத்திலிருந்து 173 பேர் மட்டுமே.

அதாவது 7 விழுக்காடு மட்டுமே. காரணம் இந்த பணியிடங்களுக்கு குறிப்பிட்ட பிரிவில் தொழில் நுட்ப கல்வி சான்றிதழ் (ITI) பெற்றவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். தமிழகத்தில் பெரும்பாலும் பொறியியல் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் என்பதாலும், பீஹார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அதிக அளவு தொழில் நுட்ப பயிற்சி மையங்கள் இந்த துறையில் இயங்கி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தேவைக்கேற்ற தகுதியை விட அதிக தகுதியை கொண்டதால் அவர்கள் தேர்வாகவில்லை. மேற்கண்ட அனைத்து பணியிடங்களும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி முடித்தவர்களுக்கு இந்த பணியை அளிக்க வேண்டும் என்று சொல்வது சரியல்ல. இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு (ஆர்.ஆர்.சி) தான் ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சியை அளிக்கிறது.

மேலும், இந்த பயிற்சியானது இளைஞர்களுக்கு திறன் பயிற்சியை வழங்கவும், திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் தான் என்பதோடு, இந்த பயிற்சி பெறுபவர்களுக்கு வேலை உத்தரவாதம் எதையும் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) சட்டம் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதை ஏற்று கொண்டே அவர்கள் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். ஆனாலும், பாஜக ஆட்சியில் தான் கடந்த இரண்டு வருடங்களாக குரூப் – D பிரிவு பணியிடங்களுக்கு மட்டும் தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பெற்றவர்களுக்கு 20 விழுக்காடு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்களும், இந்திய ரயில்வே துறையின் ஆட்சேர்ப்பு பிரிவு நடத்தும் தேர்வுகளில் பங்கு பெற்று தேர்வு பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, தொடர்ந்து ரயில்வே தேர்வுகளில் வட மாநிலத்தவர் அதிகம் இடம் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தவறானது என்பதையும், தகுதி அதிகமாக தேவைப்படும் பணியிடங்களில் அதிக தமிழர்கள் இடம்பெறுகிறார்கள் என்பதையும், ஒரு சில பணியிடங்களில் தமிழர்களின் தேர்வு குறைவாக இருப்பதற்கு காரணம் தேவைக்கு அதிகமான தகுதி என்பதையும் உணர்தல் வேண்டும்.

ஆகவே, தமிழக அரசியல் கட்சிகள் இதை உணர்ந்து கொள்வதோடு, தேவையில்லாத வகையில் மொழி அரசியலை திணித்து, உண்மைக்கு மாறான தகவல்களை அவசர கோலத்தில் தெளித்து மக்கள் மத்தியில் பதட்டத்தை உருவாக்குவதை நிறுத்தி கொள்வது சிறப்பை தரும். புற்றீசல் போன்று பொறியியல் கல்லூரிகளை வியாபார நிறுவனங்களை போல் திறந்து விட்டு, கல்வியை வியாபாரமாக்கியவர்கள் தான் கடந்த இரு தலைமுறை இளைஞர்களின் ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற நிலைக்கு காரணம்.

கல்விக்கேற்ற பணியை உருவாக்காமல், பணிக்கேற்ற கல்வியை கொடுக்காமல் கல்வியை வியாபாரமாக்கி, கடந்த 30 வருடங்களாக தமிழகத்தை சீரழித்து விட்டவர்கள், இன்று தங்களின் தவறை மறைக்க, ‘வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ’ என்று அறிக்கைகள் விடுவதும், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று பேசுவதும் தமிழக இளைஞர்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம்.

தொழிற்கல்வி வேண்டும் என்றால், அதை குலக்கல்வி என்று சொல்பவர்கள், அரசியல் மூலம் மொழியை வளர்க்க தவறியவர்கள், மொழியின் மூலம் தங்களின் அரசியல் பிழைப்பை நடத்தி கொள்வது அடுத்த தலைமுறையினை அதல பாதாளத்தில் தள்ளிவிடும். நம்மை நாம் திருத்தி கொள்ளாமல் மற்றவர்களை பழித்து, இழித்து மாணவர்களின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளும் போக்கினை சில தமிழக அரசியல்வாதிகள் நிறுத்திக்கொள்வது நலன் தரும்.

கட்டுரை:- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,
பாரதிய ஜனதா கட்சி- தமிழ்நாடு.

Exit mobile version