டெல்லியில் நேற்று நடந்த டைம்ஸ் நவ் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது :
பலர் வரி செலுத்தாத போதும், அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைக் கண்டறியும் போதும், நேர்மையாக வரி செலுத்துபவர்கள் தலையில் கூடுதல் சுமை விழும். எனவே, அனைவரும் தங்கள் வரியை சரியாக செலுத்த வேண்டுமென வலியுறுத்திக் கொள்கிறேன். நம்ப முடியாது, ஆனால், இதுதான் உண்மை.
நாட்டில் 2,200 பேர் மட்டுமே ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
பொருளாதார வளர்ச்சிக்கு அழுத்தம் கொடுக்க, சிறிய நகரங்களில் கவனம் செலுத்துவது இதுவே முதல் முறை.
இனியும் நம் தேசம் நேரத்தை வீணாக்காது. அது நம்பிக்கையுடன் முன்னேறும். 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைய மத்திய பட்ஜெட் நிச்சயம் உதவும்.

கடந்த 8 மாத ஆட்சியில் பல வரலாற்று சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
விரைவாக முடிவுகளை எடுக்க நம் நாடு, விரைவான வேகத்தில் செயல் புரிந்து வருகிறது.
நடுத்தர வர்க்கத்தினருக்காக சிறப்பு நிதியம் உருவாக்கியது, சீட்டு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்கவும் சட்டங்களை கடுமையாக்கியது, முத்தலாக் தடை, கார்ப்பரேட் வரி குறைப்பு, ரபேல் விமானம் வாங்கப்பட்டது, ராமர் கோயில் கட்டுதல், குடியுரிமை திருத்த சட்டம் என முக்கிய பல முடிவுகளை இந்த அரசு எடுத்துள்ளது. இவை எல்லாமே வெறும் சாம்பிள்தான்.
இனிமேல்தான் உண்மையான ஆக்ஷனே ஆரம்பிக்கப் போகிறது. இதுபோன்ற எண்ணற்ற முடிவுகளை இடைவிடாது என்னால் எடுக்க முடியும். அவைகள் வெறும் சதமாக இருக்காது, இரட்டை சதமாக இருக்கும் என்றார்.
என்னவாக இருக்கும் ?
ஏற்கனவே, பிரதமர் மோடி எடுத்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து, தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், பிரதமரின் இந்த பேச்சு, மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்ததாக, கருப்பு பணம் பறிமுதல் உட்பட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை அமல்படுத்தும் அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















