பதிவு செய்த வேலை தேடுவோருக்காக , மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய வாழ்க்கைத் தொழில் சேவைத் திட்டம், TCS iON Digital Learning. அமைப்புடன் சேர்ந்து இலவச ஆன்லைன் ‘’வாழ்க்கைத் தொழில் பயிற்சி’’யைத் தொடங்கியுள்ளது. இன்றைய சூழலில் தொழில்துறை விரும்பக்கூடிய திறமைகளை இந்தப்படிப்பு அளிக்கும். மென் திறன் குறித்த இந்தப் பயிற்சி, பெருவணிக நடைமுறைகளுடனான கற்பவர்களின் ஆளுமை மேம்பாட்டை அதிகரிப்பது, பயனுள்ள விளக்க உரை ஆகியவற்றுடன் இதர தேவையான மென்திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும். இந்த பயிற்சிகள் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டம் (National Career Service Project – NCS) தளத்தில் கிடைக்கும்.
வேலை தேடுதல், வேலை பொருத்துதல், வாழ்க்கைத் தொழில் ஆலோசனை, தொழிற்கல்வி வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டு படிப்புகள் பற்றிய தகவல், தொழில் பழகுதல், பயிற்சி பெறுதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும் தேசிய வேலைவாய்ப்பு சேவைக்கான தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத் திட்டத்தை அமைச்சகம் ஆன்லைன் தளம் மூலம் (www.ncs.gov.in) செயல்படுத்தி வருகிறது. தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டத்தில் சுமார் ஒரு கோடி வேலை தேடுவோரும், 54 ஆயிரம் வேலை கொடுப்போரும் பதிவு செய்துள்ளனர். இதுவரை இந்தத் தளத்தின் மூலம், 73 லட்சம் காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டத்துடன் நாடு முழுவதும் உள்ள 200 மாதிரி வாழ்க்கைத் தொழில் மையங்கள் உள்பட ,சுமார் 1000 வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவல் மற்றும் அதைத் தொடர்ந்துள்ள பொருளாதார முடக்கம் காரணமாக தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களைக் குறைக்கும் வகையில் ஏராளமான இதர முயற்சிகளையும் என்சிஎஸ் மேற்கொண்டு வருகிறது.
வேலை தேடுவோர், வேலை கொடுப்போர் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பணியிடத்திலிருந்து பணியாளர்களைத் தேர்வு செய்வது வரை அனைத்தும் இந்தத் தளத்தில் நிறைவடையும். இந்த ஊரடங்கு காலத்தில் சுமார் 76 ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம்களை என்சிஎஸ் நடத்தியுள்ளது.
வீட்டிலிருந்தே செய்யும் வேலைகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளுக்கான சிறப்பு இணைப்பு தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்ட தளத்தின் முகப்புப் பக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை தேடுவோர் அதை நேரடியாக அணுகலாம்.
ஆன்லைன் மதிப்பீடு, வாடகைச் சேவைகளை வழங்கும் HIREMEE தளத்துடன் கூட்டாக என்சிஎஸ் வேலை தேடுவோருக்கான வீடியோ சுயவிவர உருவாக்க செயல்பாடுகளையும் வழங்குகிறது. தேசிய வாழ்க்கைப்பணி முன்னேற்ற சேவைத்திட்டத்தில் உள்ள அனைத்து சேவைகளும் இலவசம்.