இலங்கையில் தமிழர்களுக்கு வீடு பிரதமர் மோடி உறுதி

இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று (ஜூலை 21) பிரதமர் மோடியை சந்தித்தார். இதில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் பேசிய மோடி, ‘இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு வீடு கட்டித்தரப்படும், நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்’ எனக் கூறினார்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று (ஜூலை 20) இந்தியா வந்துள்ள அவர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், இன்று பிரதமர் மோடியை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் இருநாட்டு இடையில் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிசக்தி, யு.பி.ஐ பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீண்டு வரும் இலங்கையுடன் இந்தியா தோளோடு தோள் நின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இலங்கையில் தமிழ் மக்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

நாகப்பட்டினம் – இலங்கை இடையே பயணிகள் கப்பல் இயக்க இருநாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை துவங்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் யு.பி.ஐ பண பரித்தனையை இலங்கையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version