பிரதமரை தரைகுவாக பேசிய ஜோதிமணிக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்.

கொரோனா தொற்றினால் நிலைகுலைந்திருக்கின்ற உலகநாடுகள் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் தொலைநோக்குப்பார்வையை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

உலகநாடுகள் தொற்றிலிருந்து விடுபடுவதற்காக மருந்துகளை அனுப்பியதற்காகவும், உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும், பல பன்னாட்டு அமைப்புகளும் பிரதமர் மோடிஜிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், ஊரடங்கு படிப்படியாக நீக்குவதற்கான செயல்திட்டங்களை அறிவித்திருப்பதோடு, முடங்கியுள்ள பொருளாதாரத்துக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களும் உலகநாடுகளுக்கே சிறந்த முன்னுதாரணங்களாகத் திகழ்கின்றன.

இந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில் தொடர்ந்து நாடகமாடி வருகின்ற காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஜோதிமணி அவர்கள், ஒரு தனியார் தொலைக்காட்சியில் நமது மாண்புமிகு பிரதமரைக் குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் பாஜக கட்சியினரை மட்டுமல்ல; சமநோக்குடைய தமிழர்கள் அனைவருக்கும் மிகுந்த கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றையும் இதுவரை நிறைவேற்ற முடியாத விரக்தியை, பிரதமரை இவ்வாறு தரம்தாழ்ந்து விமர்சிப்பதன் மூலம் ஜோதிமணி வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை. எனவே, அவரது வெறுப்பை உமிழும் விமர்சனத்துக்கு, பாஜகவின் சார்பில் விவாதத்தில் பங்கேற்ற நண்பர் கரு. நாகராஜன் அவர்கள், உரிய முறையில் சரியான எதிர்வினையாற்றியுள்ளார். மக்கள் போற்றும் பிரதமரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்த ஜோதிமணிக்கு, உடனடியாக உரிய பதிலடி கொடுத்த திரு. கரு நாகராஜன் அவர்களுக்கு எனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஹிம்சையைப் பின்பற்றுவதாகப் பெருமைபேசுகின்ற ஒரு பழம்பெரும் தேசியக்கட்சியைச் சேர்ந்தவரும், அரசியல் சட்டமைப்பின்மீது பிரமாணம் செய்து பதவியேற்றவருமான ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் இவ்வளவு தரம்தாழ்ந்து பேசியிருப்பது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

நாட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், மிகப்பெரிய பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறை பிரதமராகப் பதவியேற்ற நமது மோடி அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்ற ஜோதிமணி போன்றோருக்கு இனிவரும் காலங்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். உண்மை இவ்வாறிருக்க, திரு. கரு நாகராஜனின் எதிர்வினையை மட்டும் மையப்படுத்தி, திசைதிருப்புகிற விஷமத்தனங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்ற எதிர்க்கட்சிகளும், சில ஊடகங்களும் தங்களது போலியான நடுநிலைமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடிஜி அவர்கள், வலிமையான உலகத்தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகின்றார்.

ஆகவே, அவரைப்பற்றி அநாகரீகமாகப் பேசுகிறவர்கள், அதற்குரிய எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதை உணர்தல் வேண்டும்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன் தனது கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

Exit mobile version