மோடி அரசு புதிய திட்டம் ராணுவத்தில் 04 ஆண்டுகள் சேவையாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு.

இந்திய ராணுவத்தில் 04 ஆண்டுகள் சேவையாற்ற இளைஞர்களுக்கு வாய்ப்பு.

புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கையை வெளியிட்டது மத்திய அரசு.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோதி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் விளக்கினர்.

அதன்படி அக்னிபத் என்கிற புதிய ராணுவ ஆட்சேர்ப்பு கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தில் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை இந்த அக்னிபத் திட்டம் வழங்கும்.

நாட்டில் உள்ள பாதுகாப்பு படையை பலப்படுத்தவும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேவையாற்றுவதற்கு அந்த வாய்ப்பை வழங்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவித்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிலுள்ள இளைஞர்கள் அனைவருக்கும் தங்களது வாழ்நாளில் ஒருமுறையேனும் ராணுவ சீருடை அணிய வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும் என தெரிவித்தார்.

அக்னிபத் திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு சேவையின் போது வீரர்களுக்கு கிடைக்கும் பயிற்சியும் அனுபவமும் திறனும் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர்.

அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் இந்திய ராணுவத்தில் 04 ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

இளைஞர்களின் திறனுக்கு ஏற்ப இந்திய ராணுவத்தில் உள்ள காலாட்படை, விமானப்படை மற்றும் கப்பல் படையில் 4 ஆண்டுகள் வீரர்களாக பணியாற்றலாம்.

வீரர்களுக்கு முதலாண்டில் மாதம்தோறும் ஊதியமாக ரூ.30,000 ம் நான்காவது ஆண்டில் மாதந்தோறும் ஊதியமாக ரூ.40,000 ம் வழங்கப்படும்.

அதாவது முதலாம் ஆண்டு ஆண்டு ஊதியமாக ரூ.4.76 லட்சமும் நான்காம் ஆண்டு ஆண்டு ஊதியமாக ரூ.6.92 லட்சமும் கிடைக்கும்.

இவை தவிர நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்படும் போது ரூ.10.04 லட்சம் ஒரே ஒரு முறை சேவை நிதி தொகுப்பாகவும் அதற்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

மேலும் நான்காண்டு சேவையில் பணியில் இருக்கும்போது உயிரிழக்கும் வீரர்களுக்கு இழப்பீடாக ரூ.44 லட்சமும் காப்பீட்டு தொகையாக ரூ.48 லட்சமும் இராணுவத்தின் சார்பில் வழங்கப்படும்.

ராணுவத்தில் நான்காண்டு சேவை வகித்த பின்னர் பணியில் தொடர விரும்பினால் அவர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம். அக்னி வீரர்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களைப் பணிக்கு சேர்த்துக் கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும்.

மேலும் மிகச் சிறப்பாக பணியாற்றும் வீரர்களில் 25% பேர் வழக்கமான ராணுவ சேவைக்கு பணியாற்ற இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பணியின் போது வீரர்களின் திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி களும் இணைந்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்படும்.

நான்காண்டு சேவைக்கு பின்னர் அணி வீரர்களுக்கு வங்கிக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதன் மூலம் 4 ஆண்டு ராணுவத்தில் சேவையாற்றிய பின்னர் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்பை பெற முடியும்.

இந்த பணியில் சேர்வதற்கு 17 1/2வயது முதல் 21 வயது வரையிலான ஆண் பெண் இருவரும் தகுதியானவர்கள்.

இந்தத் திட்டத்திற்கான முதல் ஆட்சேர்ப்பு முகாம் 90 நாட்களில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும்.

Exit mobile version