பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதிதாக பதவியேற்ற 18 மாநிலங்களவை உறுப்பினர்களை நேரில் சந்தித்து உரையாடினார். நாடாளுமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற ஆலோசனையையும், ஊக்கத்தையும் அளித்தார். எம்.பிக்கள் அனைவரும் பதவியேற்ற பின்னர் மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்தது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களுடன் நல்ல சந்திப்பு நிகழ்ந்தது, அவர்களின் கருத்துகளையும் பொதுச் சேவையின் மீதான ஆர்வத்தையும் கேட்க அருமையாக இருந்தது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, அவை நடவடிக்கைகளுக்கு பயனுள்ள பங்களிப்பை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பதவியேற்றவர்களுக்கு பிரதமர் மோடி மூன்று முக்கிய மந்திரங்களை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.
- கொள்கை விவகாரங்களில் புதுப்பிப்புடன் இருங்கள்
- நாடாளுமன்ற அவையிலும், களத்திலும், மக்கள் மத்தியிலும் திறம்பட செயல்பட வேண்டும்.
- சமூக ஊடகங்களில் முனைப்புடன் இருப்பது, நிலையான நபர்களை இணைப்பதன் அவசியத்தை அறிந்திருத்தல்.
உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியதாக எம்.பிக்களை சந்தித்த புகைப்படத்துடன் பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சந்திப்பு சமூக விலகலை கடைபிடித்து நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், ஒவ்வொரு எம்.பியும், தனித்தனியாக தங்களை விரிவாக அறிமுகப்படுத்திக்கொண்டனர். அவர்கள் அனைவரிடமும் பிரதமர் மோடி சில கேள்விகளை எழுப்பியதோடு, தனித்தனியாகவும் கலந்தாலோசித்தார். இதில், குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் மற்றும், பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்தும் ஆலோசித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, பிரதமரை தவிர்த்து, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் செயலாளர் அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.