முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 7 ஆவது ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியிலுள்ள அவரது நினைவிடமான ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
”அவரது நினைவு நாளன்று அடல் ஜியை நினைவு கூர்கிறேன். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.”
