நாங்குநேரி சம்பவம்-திமுக விதைத்த விஷவிதை மரமாக மாறியுள்ளது-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !

நாங்குநேரியில் பள்ளி சிறுவன் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக விதைத்த விஷவிதை
திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக மாறி இருக்கிறது. அதை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை. நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஜாதியப் பிரச்னைகள் காரணமாக, பன்னிரண்டாவது வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் அவரது சகோதரி இருவரும், சக பள்ளி மாணவர்களால் வெட்டப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது.

இந்த சம்பவத்திலும், திமுக கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் போலீசார் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. உதட்டளவில் சமூகநீதி பேசி, தேர்தல் ஓட்டுகளுக்காக சமூகத்தில் ஜாதிய வேற்றுமையை வளர்த்துக் கொண்டிருக்கும் திமுக.,வின் செயல்பாடுகளின் விளைவுதான், இது போன்ற கொடூர சம்பவங்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
தி.மு.க கட்சியிலும், பொதுமக்கள் மத்தியிலும், திமுக அமைச்சர்கள் பட்டியல் சமூக மக்களை அவமானப்படுத்தும் விதமாக நடத்துவது, செய்திகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் பட்டியல் சமூக உள்ளாட்சி உறுப்பினர் ஒருவரை ஜாதியின் பெயரைச் சொல்லி அழைத்த அமைச்சர் பொன்முடி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூக ஊராட்சி மன்ற பெண் தலைவரை, தேசியக் கொடி ஏற்ற விடாமல் தடுத்தும், அமர்வதற்கு நாற்காலி கூடக் கொடுக்காமல் அவமானப்படுத்திய உங்கள் கட்சியினர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நீதிபதியானது நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்ன ஆர்.எஸ்.பாரதி மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த உங்கள் கட்சி பார்லி., உறுப்பினருக்குக் கூட நாற்காலி கொடுக்காமல் நிற்க வைத்த உங்கள் அமைச்சர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?. வேங்கைவயல் சம்பவம் நடந்து 200 நாட்களுக்கு மேல் ஆகிறது.

இதுவரை நீங்கள், குற்றவாளியைக் கைது செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மத்திய அரசு, பட்டியல் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக ஆண்டுதோறும் வழங்கும் நிதியைச் செலவிடாமல் திருப்பி அனுப்பி வருகிறீர்கள். இதுவரை பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை திருப்பி அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் ஒரு படி மேலாக, பட்டியல் சமூக மக்களுக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியை, மற்ற திட்டங்களுக்கு மடைமாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

வெகுதொலைவில் இல்லை
திமுக ஆட்சியின் அவலங்கள் அனைத்திற்கும் யார் மீதோ பழிபோட்டு மடைமாற்றிக் கொண்டிருக்கும் திருமாவளவன் உடைந்த பழைய நாற்காலி, தனிப்பட்ட முறையில் உங்களுக்கு வேண்டுமானால் போதுமான சமூக நீதியாக இருக்கலாம். ஆனால், உங்களையும் தலைவர் என்று பின்தொடரும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் இதன் மூலம் நீங்கள் கொடுக்கும் செய்தி என்ன? இப்படி திமுகவின் சமூகநீதிக்கெதிரான செயல்கள் அனைத்தையும் மடைமாற்றுவதால் உங்களுக்குக் கிடைக்கும் பலன்தான் என்ன?

முதல்வர் ஸ்டாலின் வெறுப்பில் பிறந்து, எழுபது ஆண்டுகளாக தமிழகத்தில் வெறுப்பை மட்டுமே விதைத்துக் கொண்டிருக்கும் உங்கள் கட்சி, தற்போது விதைத்துக் கொண்டிருப்பது, சமூகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக் கொண்டிருக்கும் ஜாதியப் பாகுபாடு என்னும் விஷ விதை. உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வளர்த்து வரும் இந்த விஷச் செடி, எம் தமிழக மக்களால் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version