சமீபத்தில், அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும், சைவ வைணவ மதங்கள் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பொன்முடியிடம் இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “சைவ, வைணவ மதங்களை இழிவுபடுத்தி பேசிய பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்?” என்று அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பினார்.இதுகுறித்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா என டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடி மீது ஐந்து இடங்களில் புகார் வந்துள்ளன என தகவல் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து மறு விசாரணையில், தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. அதாவது, “பொன்முடி மீது எத்தனை புகார்கள் வந்தாலும் ஒரே ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யுங்கள். பல வழக்குகள் பதிவு செய்தால் நீர்த்து போய்விடும். எதிர்காலத்தில் பொன்முடி போன்று யாரும் பேசக்கூடாது. பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யாவிட்டால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசியதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யத் தயாராக இல்லை என்றால், அமைச்சருக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று கூறி வழக்கின் விசாரணையை இன்றைய தினம் ( 23.04.2025 ) ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, “பொன்முடியின் இந்த பேச்சு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால், வழக்கு முடித்துவைக்கப்பட்டது” என்று வாதிட்டார்.பொன்முடி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் ஆஜராகி, ”40 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு குறித்து பொன்முடி உள் அரங்கத்தில் தான் பேசினார். முழுமையான பேச்சை கேட்காமல் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்றார்.
அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தமிழகத்தின் முக்கிய சமயங்களான வைணவ மற்றும் சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கள் இரு சமயத்தினரின் மனதை புண்படுத்தியுள்ளது.அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது. இருப்பினும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்திருக்கிறது. பொன்முடி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது துரதிருஷ்டவசமானது.இந்த பேச்சுக்காக அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. ஏற்கனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு, உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவின் மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி அதனை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.
வெறுப்பு பேச்சு தொடர்பாக, பொன்முடிக்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்ய பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறேன்” என்றார்.
