பாரதீய ஜனசங்கத்தின் மாநில தலைவராகவும் பின்னர் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவராக இரண்டு முறை, 1986ம் ஆண்டு வாக்கிலும் பின்னர் 1997 – 2000ம் ஆண்டிலும் செயல்பட்டவரும் மயிலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான K N லஷ்மணன் ஜி நேற்று இரவு காலமானார்.
அவரின் மறைவுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் பாஜக மூத்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். தமிழக பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்
“அரசியல், ஆன்மீகம், கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் கே.என்.லட்சுமணனின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.
சேலம் நகராட்சி கல்லூரியில் பட்டம் பயின்ற கே.என்.லட்சுமணன் தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவர், மாநில பொதுச் செயலாளர் பின்னர் மாநிலத் தலைவர் என்று படிப்படியாக பல்வேறு பதவிகளை அலங்கரித்தவர். ஒன்பது ஆண்டுகளாக தமிழக பாஜகவின் தலைவராக விளங்கினார்.
2001-ல் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970-ல் கே.என்.லட்சுமணனும் நா.பா.வாசுதேவனும் 35 மாணவர்களோடு தொடங்கிய ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி இன்று 10 ஆயிரம் மாணவர்கள் பயிலும் சிபிஎஸ்இ பள்ளியாக சேலம் பகுதியில் சிறந்து விளங்குகிறது.
தீனதயாள், வாஜ்பாய் ஆகியோர் முதல் அத்வானி, பிரதமர் நரேந்திர மோடி வரை அனைவரிடமும் நெருக்கமாக திகழ்ந்தார்.பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 21-ம் தேதி அன்று கே.என்.லட்சுமணனை தொடர்பு கொண்டு அவர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நலம் குறித்து விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 2006 முதல் இன்று வரை தேசியப் பொதுக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்து வந்தார்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை அரப்பணித்துக் கொண்ட மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர் இவர். அனைவரிடமும் அன்பு பாராட்டும் பெருமை மிக்க தலைவர் கே.என்.லட்சுமணனை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் தமிழக பாஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றேன்”
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.