‛கல்விக்கு நாட்டின் தலைவிதியை மாற்றும் சக்தி உண்டு’: பிரதமர் மோடி.

டில்லியில் நடந்த அகில பாரதிய ஷிக்ஷா சமாஜம் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான மையமாக இந்தியாவை மாற்றுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக்கமாக கொண்டு உள்ளது. நாட்டின் ஆராய்ச்சி சூழலை பலப்படுத்துவதற்கு, கல்வியாளர்கள் கடினமாக உழைத்து வருகின்றனர். புதிய மாற்றங்களை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். பாரம்பரிய அறிவு அமைப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்பத்திற்கு சமமான முக்கியத்துவம் அளிக்கிறது.

இளைஞர்களின் திறமையை விட அவர்களின் மொழியின் அடிப்படையில் அவர்களை மதிப்பிடுவது மிகப்பெரிய அநீதி. தேசிய கல்விக் கொள்கை, பயிற்சியை வழங்குவதுடன், அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குகிறது.

புதிய சாத்தியக்கூறுகளின் வாய்ப்புகளாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. பல நாடுகள் அங்கு ஐஐடி வளாகங்களை திறக்க இந்தியாவை அணுகுகின்றன. நாட்டின் தலைவிதியை மாற்றும் ஆற்றல் கல்விக்கு உண்டு. இலக்கை நோக்கி நாடு முன்னேறி செல்வதில் கல்விக்கு முக்கிய பங்கு உண்டு. பேரிடர் மேலாண்மை, பருவநிலை மாற்றம், சுத்தமான எரிசக்தி ஆகியவை குறித்த விழிப்புணர்வு பாடங்களை மாணவர்களுக்கு பள்ளிகள் வழங்க வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Exit mobile version