ராஜஸ்தானில் கொடூரமாக கொலைசெய்ப்பட்ட தையல்காரரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மக்கள் !

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வந்த தையல்காரர் கன்னையா லால் (வயது 40). இவரது மகன்களில் ஒருவரான 8 வயது மகன், சமூக வலைத்தளங்களில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார் என கூறப்படுகிறது. இது தொடர்பாக லாலுக்கு கொலை மிரட்டல் வந்து, அவர் போலீசில் புகார் செய்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா லால் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் தாங்கள் எடுத்து வந்த கத்திகளால் அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதில் அவர் உயிரிழந்து உள்ளார்.

இதனை தொடர்ந்து கொலையாளிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி விட்டனர். இந்த கொலைக்காட்சிகளை கொலையாளிகளே வீடியோவாக படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவத்தினை தொடர்ந்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. உள்ளூர் சந்தைகள் மூடப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன. கொலையாளிகளை கைது செய்யக்கோரி உளளூர்வாசிகள் போராட்டம் நடத்தினர். இந்த படுகொலைக்கு முதல்-மந்திரி அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், இது வேதனையான, வெட்கக்கேடான சம்பவம் ஆகும். நாட்டில் தற்போது பதற்றமான சூழல் நிலவுகிறது. பிரதமரும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் நாட்டு மக்களுக்கு உரையாற்றக்கூடாதா? இந்த படுகொலை சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை பகிர்ந்து கொண்டு, நிலைமையை மோசமாக்கி விட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என கூறி உள்ளார். கொலையாளிகள் மற்றொரு வீடியோவில் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, உதய்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரத்துக்கு இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டது. இந்த படுகொலையை நடத்திய கொலையாளிகள் ராஜ்சமந்த் மாவட்டத்தின் பீம் பகுதியில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவையும் ராஜஸ்தான் அரசு அமைத்து உள்ளது. ராஜஸ்தானின் ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 2 பேரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு அதிகாரிகள் திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளனர். அவர்கள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது என அறியப்பட்டு உள்ளனர். இவர்களில் கவுஸ் முகமது கஞ்ஜிபீர் பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வருகிறார். பில்வாரா பகுதியை சேர்ந்த ரியாஸ், கஞ்ஜிபீரில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை அடிப்படையாக கொண்ட தவாத்-இ-இஸ்லாமி என்ற முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி பில்வாடாவில் வசிக்கும் ரியாசின் மருமகன் கூறும்போது, எனது மாமா செய்தது கண்டனத்திற்குரியது. அவர் அமைதியை குலைக்க முயற்சித்து உள்ளார். அவருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்கள் இருவரும் ராஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் சர்புஜா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட தையல்காரர் கன்னையா லாலின் இறுதி ஊர்வலம் இன்று நடந்தது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். மோட்டார் சைக்கிளிலும் அணியாக திரண்டு சென்றுள்ளனர்.

Exit mobile version