பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும்; ஜென்ம ராசி எதுவென்று தெரியாத பங்குனி மாதத்தில் பிறந்தவர்களுக்கும்; தீ, து, ஏ, ச, த, தே, தோ, சா, சி, சீ …. ஆகிய எழுத்துகளில் ஏதேனும் ஒன்றைத் தங்கள் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டவர்களுக்கும் இப்பலன்கள் பொருந்தும்.ராசி அதிபதி: குரு. நட்சத்திர அதிபதிகள்: குரு, சனி, புதன். யோகாதிபதிகள்: குரு, சந்திரன், செவ்வாய். பாதகாதிபதி: புதன். மாரகாதிபதி: புதன், சனி.
மேன்மைமிகு மீன ராசி
தனக்காரகன், புத்திரக்காரகன் ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்து, தோற்றத்தில் கவர்ச்சியாய், பேச்சில் இனிமையாய், கள்ளம் கபடம் இல்லாமல் வெளிப்படையாகப் பேசி எண்ணங்களை வெளிப்படுத்தும் ஆற்றல்பெற்ற மீன ராசி நண்பர்களே!
யாரிடமும் கைகட்டி வாய்பொத்திப்பேசுவது என்பது உங்களுக்கு அறவே பிடிக்காத ஒன்றாகும். நீங்கள் போடும் திட்டங்களையும் அதைச் செயல்படுத்தும் விதத்தினையும் மிகமிக நெருங்கியவர்களிடம்கூட வெளியிடமாட்டீர்கள். உங்களுக்குள் எப்போதும் ஒரு ரகசியம் இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் பல கட்டங்களில் எதிர்பாலினரால் காதல், களவு, இன்பம் என்ற நிலையை அடைந்து அதே நபரால் பிற்பொழுதில் துன்பத்தை அடைபவராக உங்களில் சிலர் இருப்பீர்கள். அவர்களால் அவமானமும் அடைவீர்கள். பிறர்மீது பச்சாதாபம், பாசம், அன்பு கொள்பவரான உங்களிடம் பழகுவதற்கு இனிமையான குணமும் இருக்கும். குழந்தைப் பருவத்தில் பொருளாதார நிலையில் மேன்மையுள்ளவராக இல்லாமல் போனாலும் வாழ்வின் மத்திய காலத்தில் பெரிய செல்வாக்குடையவராக மாறிவிடுவீர்கள்
உங்களுக்கு நண்பர்கள் பலர் இருப்பதால் தக்க சமயத்தில் அவர்களைப் பயன்படுத்தி உங்கள் எண்ணங்களை எளிதில் செயலாக்கிக் கொள்வீர்கள். இயற்கையாகவே உங்களுக்கு அனைத்து வளங்களும் அமையக்கூடிய வாய்ப்புண்டு என்றாலும், புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்படுபவராக நீங்கள் இருப்பீர்கள். அதற்கான அத்தனை வழிமுறைகளையும் கைக்கொண்டு எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
கற்பனையில் மிதக்கும் நீங்கள் கலைத்துறையிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சமயத்திற்கேற்றார்போல் மாறிவிடும் சுபாவம் கொண்டவர்களாக நீங்கள் இருப்பதால் உங்களில் சிலர் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் ஆளாகி விடுவீர்கள். எவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரிடம் நட்பு கொள்கிறீர்களோ அதே வேகத்தில் அவரை விட்டு விலகவும் செய்வீர்கள்.நீங்கள் பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் பேசிப்பேசியே காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். உங்களிடம் பேசுபவர்களின் பேச்சில் சின்னச்சின்ன விஷயத்தில்கூட குற்றம் கண்டுபிடிப்பீர்கள். சிலரை, சமயம் பார்த்து காலையும் வாரி விடுவீர்கள்.
உங்கள் தேவை பூர்த்தியடைவதற்காக நேரம் காலம் பார்க்காமல் பிறரின் உதவியை எதிர்பார்ப்பீர்கள். ஆனால், உங்களை நம்புகிறவர்களின் நிலைதான் பரிதாபத்திற்குரியதாகிவிடும். சுக வாழ்க்கையை விரும்பும் நீங்கள் உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு மணவாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் கணவன் மனைவிக்குள் கீரியும் பாம்பும் என்ற நிலையே இருக்கும். வாழ்க்கைத்துணையால் உற்றார் உறவினர்களால் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும் ஒரு சிலருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறக்கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.
மேலே கூறியவை உங்களின் ஒரு பக்கம்தான். மறு பக்கத்தில் உங்களுக்குள் குழப்பம் அடைவதும், சட்டத்திற்கு எதிராக செயல்படும் போக்கும், பிறரை நம்பாத மனநிலையும், தீய பழக்கத்திற்கு அடிமையாவதும், ரகசிய அந்தரங்கங்களை நினைத்து தன்னிச்சையாக முடிவெடுப்பதும், அடிக்கடி தேவையற்ற மனமாற்றமும், ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையும் இருக்கும்.
உங்கள் ராசிநாதன் சுப கிரகம் என்பதால் கடமையிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கும், ஊருக்கும் உபதேசம் புரிவதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள் சுவரை வைத்துதான் சித்திரம் எழுதவேண்டும் என்ற முடிவில் நீங்கள் சரியாக இருப்பீர்கள். வெளித்தோற்றத்திற்கு மிகச் சிறப்பாக வாழ்பவராக காட்சியளிப்பீர்கள்.
உங்கள் மனதின் அடியாழத்தில் தெய்வீக, ஆன்மீக, சிந்தனைகள் பதிந்திருக்கும். நகரப்பகுதியில் வசித்தாலும் இயற்கை எழில் கொஞ்சும் கிராம வாழ்க்கையின்மீது அளவில்லா பிரியம் இருக்கும். உங்கள் கடைசிகாலம் இயற்கையுடன் இணைந்ததாகவே இருக்கும். உங்களில் பெரும்பாலோருக்கு கண்கள் கவர்ச்சியாக இருக்கும். சிலர் உங்கள் சக்திக்கு மிஞ்சிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். அல்லது, உங்கள் சக்திக்கு மிஞ்சிய விஷயங்களைக் கற்பனை செய்தும், நினைத்துப் பார்த்தும் அதன்படி வாழ முயற்சிப்பீர்கள்.
உங்கள் ராசியினரில் பலர், பிற்கால வாழ்க்கையில் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டுவீர்கள். அதற்கு காரணம் உங்கள் ராசிநாதனான குரு பகவானே.
நடைமுறை வாழ்க்கையில் கூட உங்களால் எது முடியுமோ, உங்களுக்கு எது சாதகமாக அமையுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். சூழலுக்கேற்ப வாழவேண்டிய வழிமுறைகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உங்களின் போக்கு பலருக்கும் ஆச்சரியமாகவே இருக்கும். வாழ்க்கையின் மேடு பள்ளங்களையும், வெற்றித் தோல்விகளையும் பெரும்பாலும் சந்திப்பவர்கள் நீங்கள் என்றே சொல்ல வேண்டும்.
சில நேரங்களில் எரிமலைபோல் வெடித்தாலும் அடுத்த நிமிடமே ஆழ்கடல்போல் அமைதியாகிவிடுவீர்கள். சிறிய விஷயத்தையும் பெரிதாக நினைத்து மகிழ்வீர்கள். பெரிய விஷயத்தை மிகவும் சாதாரணமாக நினைத்து விடுவீர்கள். உங்களை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. வம்பு என்று வந்துவிட்டால் எந்தவொரு நிலைக்குப் போகவும் தயங்க மாட்டீர்கள். சில நேரங்களில் நீங்கள் சோர்வடைந்து அதனால் செயலில் தோல்வியை சந்திப்பீர்கள். அதை உங்கள் முகமே காட்டிக்கொடுத்துவிடும்.
இனிய வார்த்தைகளால் வசீகரிக்கும் உங்கள் ஆற்றல் பலரையும் உங்கள் நட்பில், உறவில் கட்டிப்போட்டுவிடும். மற்றவரை கவருகின்ற ஆற்றல் இயல்பாகவே உங்களிடம் நிறைந்திருக்கும்.
உங்கள் வாழ்க்கையில் எதார்த்தத்தை விட கற்பனைக்கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போலவே வாழ விரும்புவீர்கள். நீங்கள் படித்த கதைகளை வைத்து அதேபோல் வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புவீர்கள். அதன் காரணமாகவே பல நல்ல வாய்ப்புகளையும் இழந்து விடுவீர்கள். வாழ்க்கையில் மற்றவர்கள் அடையாததை, அடைய முடியாததை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.
உண்மையையே விரும்பும் மனிதர்போல் உங்களை உலகம் கொண்டாடும். எல்லாம் விதிதான். தெய்வம் நமக்கு வேண்டியதைக் கொடுக்கும். நாம் போக வேண்டிய வழியில் நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் இருக்கும். அதே நேரத்தில் உணர்ச்சி வயப்படுவதும், தொட்டால் துவண்டுவிடும் மனமுடைய உங்களுக்கு முன்கோபம் என்பது எக்காலத்திலும் நீடிக்கும். உங்களில் சிலர் வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பக் கூடியவர்களாகவும், நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போகக்கூடியவர்களாகவும் இருப்பீர்கள். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு பழக்கத்திற்கு ஆளாகி கடைசிவரை அதை விடவும் முடியாமல் வாழ்ந்து வருவீர்கள். சிலர் ஞானிகளாகவும், தீர்க்கதரிசிகளாகவும் மாறிவிடுவீர்கள். சிலர் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அவசியப்பட்டாலொழிய எந்த வேலையிலும் அக்கறை செலுத்த விரும்பாதவர்களாகவும் இருப்பீர்கள்.
சிலர் புதையல் கண்டெடுத்து அதிர்ஷ்டம் காண்பவராகவும், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகக் கூடியவராகவும் இருப்பீர்கள் உங்களைப் பாராட்டிப் புகழ்வோரையும், உங்கள் விருப்பப்படி நடப்போரையும் பெரிதும் மதிப்பீர்கள். உங்கள் சொந்த விஷயங்களில் அக்கறையாக செயல்பட்டால்தான் நீங்கள் முன்னேறமுடியும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்தால் அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
இவை எல்லாம் மீன ராசியில் பிறந்த உங்களுக்குண்டான பொதுப் பலன்களாகும். நீங்கள், மீன ராசியில் பிறந்திருந்தாலும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நட்சத்திரங்கள் வேறுபட்டிருக்கும். ராசி நாதனான குரு பகவானின் சஞ்சார நிலை மாறுபட்டிருக்கும். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் கிரகங்களின் சஞ்சாரநிலை வேறுபட்டிருக்கும். லக்னங்களில் மாற்றம் இருக்கும். தசா புத்திகளில் வித்தியாசங்கள் இருக்கும். ஒருவருக்கு அமைந்திருப்பது போல் மற்றவர்களுக்கு கிரகங்கள் அமைந்திருக்காது என்பதால் ஜனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறுபடும்.
இந்த நிலையில்தான் கோட்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து நமக்கு உண்டாகப்போகும் பலன்களை அறிந்து கொள்கிறோம். ஜாதக ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்களுக்கும் கோட்சார பலன்கள் வழியே நன்மைகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. அந்த ரீதியில் சுப கிரகமான குரு பகவானின் பெயர்ச்சிபற்றி தெரிந்து கொள்ள நாம் அனைவருமே ஆவலுடன் உள்ளோம்.
முன்னேற்றம் தருவாரா மூன்றாமிட குரு
கடந்த ஒரு வருடமாக உங்கள் ராசியான மீன ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானம், வாக்கு ஸ்தானமான மேஷத்தில் சஞ்சரித்த குரு பகவான், 1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான ரிஷப ராசியில் சஞ்சரித்து உங்களுக்குப் பலன்களை வழங்கிட உள்ளார்.
ஒரு வருடமாக இரண்டாம் வீடான மேஷத்தில் சஞ்சரித்து உங்கள் செயலில் வேகத்தை வழங்கியதுடன், மனதில் புத்துணர்ச்சியை உண்டாக்கியதுடன், தைரியமான சூழ்நிலையை வழங்கி, அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தியை உண்டாக்கி, குடும்பத்தை முன்னெடுத்துச் செல்கின்ற பலத்தை ஏற்படுத்தி, மகிழ்ச்சியான நிலையில் உங்களை வைத்திருந்தார் குரு பகவான். வேலையில்லாதவருக்கு வேலைக் கிடைத்திருக்கும். பதவி உயர்வுக்காக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைத்திருக்கும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகியிருக்கும். எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல், திடீர் பணவரவு என்று எல்லாமே உங்களுக்கு யோகமாக நடந்திருக்கும்.
இரண்டில் அமர்ந்து ஏற்றத்தை வழங்கிய குரு பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும்போது எத்தகைய பலன்களை வழங்குவார்? என்பதை நாம் பார்க்கும்போது, ‘தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்…’ என்ற பழம் பாடலே நம்முன் நிற்கிறது.
ஜென்ம ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரித்த போதுதான் துரியோதனன் படை அழிந்ததாம். அதுநாள்வரை சர்வ வல்லமையுடனும், சூழ்ச்சியாலும், சாதுரியத்தாலும், கோலோட்சி வந்த துரியோதனன், பலத்தை இழந்து, படையை இழந்து, அனைத்தையும் இழந்தது குரு பகவான் 3 ல் சஞ்சரித்த காலத்தில்தான் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
ரொம்பவும்தான் பயமுறுத்தறீங்க. அப்படி என்னதான் நடந்துடப் போகுது? இந்த வருடம் முழுக்க சோதனைதானா? சிரமம்தானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.இந்த நேரத்தில் உங்கள் ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால், தசாபுத்தி நன்றாக இருந்தால் மேலே கூறிய பலனில் நிச்சயமாக மாறுதல் இருக்கும். சரி; மூன்றாம் வீட்டிற்குவரும் குரு பகவான் என்னதான் செய்வார்?
ஜாதகத்தில் மூன்றாம் இடம் என்பது தைரிய ஸ்தானம், வீரிய ஸ்தானம், பராக்ரம ஸ்தானம், இளைய சகோதர, சகோதரி ஸ்தானம், கீர்த்தி ஸ்தானம், தொழிற் ஸ்தானம், சுகபோக ஸ்தானம், உடல் வலிமை ஸ்தானம், வெற்றி ஸ்தானம். பயண ஸ்தானம் ஒருவருக்குக் கிடைக்கும் பெருமை, ஜாதகர் செயல் ஆகியவற்றை இந்த இடத்தைக் கொண்டுதான் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
கோட்சாரத்திற்கு மூன்றாம் வீட்டிற்குவரும் குரு பகவான், முதலில் முன்பிருந்த சாதகமான நிலைகளில் பாதகமான நிலையை உண்டாக்குவார். நேற்றுவரை நல்ல விதமாகவே நடந்துவந்த யாவும் மந்தமான நிலையை அடையும். வேலையிலும் சங்கடங்கள் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையும் பறிபோகும். வருமானத்திலும் தடை உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். சுற்றி இருந்தவர்கள் ஒவ்வொருவராக விலக ஆரம்பிப்பார்கள். இல்லை என்றால் அவர்களை நீங்கள் இழக்க வேண்டிவரும். அதனால், தைரியத்தை இழக்கும்நிலை உருவாகும். தேவையில்லாத வீண் பழிகளும் சிலருக்கு உண்டாகும். எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் திணற வேண்டிவரும். என்றாலும், குரு பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் இத்தகைய சோதனைகளை உங்களுக்கு வழங்கி உங்களை சங்கடத்தில் தள்ளமாட்டார்.
மூன்றாம் இடத்தில் அமர்ந்து, அந்த இடத்திற்குரிய பலனை சங்கடமான பலனாக வழங்கும் நிலையில் உள்ள குருபகவான், அங்கிருந்து தன்னுடைய 5, 7, 9 ம் பார்வைகளை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ம் வீடுகளின் மீது செலுத்த இருக்கிறார் என்பதால், அந்த இடங்கள் எல்லாம் இக்காலத்தில் மிகச்சிறப்பான பலன்களை அடைய இருக்கின்றன.
குரு பகவான் தான் நின்ற ஸ்தானத்தை கெடுத்தாலும், தான் பார்க்கும் இடங்களையெல்லாம் செழிப்படைய வைப்பார். அந்த ஸ்தானங்களுக்குரிய பலன்களை நற்பலன்களாக வழங்கி ஜாதகரை மகிழ வைப்பார். என்பதுடன், அவர் உங்களுடைய ராசிநாதன் என்பதால் எந்த வகையிலும் உங்களுக்கு சங்கடத்தை உண்டாக்க மாட்டார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைகளுக்கேற்ப அவர் பார்க்கும் இடங்கள் இக்காலத்தில் சிறப்படைய போவதால் உங்களுக்கு சந்தோஷம் அதிகரிக்கும். உடலில் புத்துணர்ச்சி தோன்றும்.
பார்வைகளால் உண்டாகும் பலன்கள்
முதலில், தனது ஐந்தாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு ஏழாம் இடமாகிய களத்திர ஸ்தானத்தைப் பார்க்கும் குரு பகவான், குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு திருமணத்தை முடித்து வைப்பார். திருமண வயதில் வீட்டில் இருக்கின்ற பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பார். பல்வேறு பிரச்சினைகளால் பிரிந்திருந்த தம்பதிகளை ஒன்று சேர்த்து வைப்பார். பிரிந்து சென்ற நண்பர்களை மீண்டும் ஒன்று சேர்ப்பார். கூட்டுத் தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். நட்பு வட்டத்தை விரிவடைய வைப்பார். தொழிலை விருத்தியடைய வைப்பார். ஆண்கள் பெண்களாலும், பெண்கள் ஆண்களாலும் பல விதங்களில் நன்மைகளை அடைய வைப்பார். சுகத்தில் மிதக்க வைப்பார். வெளிவட்டார பழக்க வழக்கங்களில் சிறப்பை ஏற்படுத்துவார்.
அடுத்து, தனது ஏழாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 9 ம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்க்கிறார் என்பதால், பித்ரு ஸ்தானம், தர்ம ஸ்தானம் என்றும் இந்த இடத்தை சொல்வோம். நேற்றுவரை உடம்பில் இருந்த சில தொல்லைகள் இப்போது அகலும், தொழிலில் இருந்த தடைகள் அகன்று விருத்தி அடையும். பழைய பிரச்சினைகளும் முடிவிற்கு வரும் தெய்வ வழிபாடு அதிகரிக்கும். ஆலயங்களுக்கு சென்றுவரும் பாக்யம் உண்டாகும். தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பணம் தாராளமாக நடமாடும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் வீட்டில் மழலை சப்தம் கேட்கும். வீட்டை மாற்றம்செய்ய நினைத்தவர்கள் இக்காலத்தில் அதைச்செய்து முடிப்பீர்கள் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்திருக்கும். மனதில் தெம்பும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.
அடுத்து, தனது ஒன்பதாம் பார்வையினால் உங்கள் ராசிக்கு 11 ம் இடமான லாப ஸ்தானத்தைப் பார்ப்பவர், நீங்கள் நினைக்கும் காரியங்களை நிறைவேற்றுவார். ஒரே இடத்தில் அடைபட்டிருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். தொழிலை விருத்தியாக்குவார். வேலையின்றி இருந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைக்கு வழியமைப்பார். வீடு மற்றும் சொத்துகள் வாங்கும் நிலையை சிலருக்கு உண்டாக்குவார். பிள்ளைகளாலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். மூத்த சகோதர சகோதரிகள் உதவிபுரியும்படி செய்வார். ஒரு சிலருக்கு, துணை இருக்க மேலும் ஒரு துணைக்குரிய தொடர்பை உண்டாக்குவார். காரணம், 11 ம் இடம் என்பது இளைய தாரத்திற்குரிய இடமுமாகும். இந்த இடத்தின் பலனாக, அபிமானத்திற்குரிய ஒருவரை உங்களுக்கு வழங்குவார். துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் இக்காலத்தில் மறுமணத்தை நடத்திவைப்பார். கடல் கடந்து சென்று வரக்கூடிய வாய்ப்புகளை ஒரு சிலருக்கு உண்டாக்குவர். பொன் பொருள் சேர்க்கையை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் உண்டாக்குவார். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வையும் பதவி உயர்வையும் அருளுவார்.
இவையாவும் குரு பகவானின் பார்வைகளால் உங்களுக்கு உண்டாகப் போகும் பலன்களாகும். ஒருபக்கம் தாழ்வு என்றால், மறுபக்கம் உயர்வு என்பதுபோல் குருபகவான் சஞ்சரிக்கும் இடத்திற்கு சங்கடத்தை உண்டாக்கினாலும், அவர் பார்க்கும் மூன்று இடங்களுக்கும் நற்பலன்களை வழங்கி உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குவார்.
பலன்களை மாற்றும் அஸ்தமன காலம்
குரு மூன்றாம் இடத்தில் சஞ்சரிப்பதால் சங்கடங்களை உண்டாக்குவார் என்று நினைப்பவர்களுக்கு ஆறுதலாக, 3.5.2024 முதல் 2.6.2024 வரை அவர் அஸ்தங்கம் அடைகிறார் என்பதால் மூன்றாம் இட குருவின் பலன்கள் இக்காலத்தில் உங்களை எந்த வகையிலும் நெருங்காமல் போகும். கடந்த கால நிலையே மீண்டும் தொடரும். உங்கள் சுய ஜாதகத்தில் திசாபுத்தி உங்களுக்கு சாதகமாக இருந்தால் அந்த நிலைக்கேற்ப யோகம் உண்டாகும். மற்ற கிரகங்களின் சஞ்சாரத்திற்கு ஏற்ப சாதக பாதக நிலைகள் உண்டாகும். குரு பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அவர் அஸ்தங்கம் அடையும்போது செயல்களில் கவனம் தேவை. அவசரப்பட்டு எந்தவொரு முடிவிற்கும் வர வேண்டாம்.
வக்ர காலம் உங்களுக்கு வசந்த காலம்
குரு பகவானின் சஞ்சாரங்களில் அஸ்தமனமும், வக்ர நிலையும் ஏற்படுவதால் அக்காலங்களில் அவர் வழங்கும் பலன்களில் மாற்றம் உண்டாகும் 15.10. 2024 முதல் 11.2.205 வரை அவர் வக்ரம் அடைவதால் உங்களுக்கு நன்மையே உண்டாகும். மூன்றாம் இடத்தில் இருந்து அவர் வழங்கி வரும் பாதகமான பலன்கள் இக்காலத்தில் மாறுபடும். பொதுவாக குரு பகவான் வக்ரமடையும் போது முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால் இக்காலத்தில் உங்களுக்கு கடந்த காலத்தில் உண்டான யோக பலன்கள் மீண்டும் தொடரும். உடல் நிலையிலிருந்த பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் கௌரவமும் அந்தஸ்தும் உயரும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
விரய சனி என்ன செய்வார்?
குரு பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12 ம் இடத்தில் விரய சனியாக சஞ்சரிக்கிறார் என்பதால் இக்காலத்தில் காரியத்தில் தேக்கமும் வருமானத்தில் குறைவும் உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல் மன உளைச்சல் ஏற்படும். மதிப்பு, கௌரவத்திற்கு பங்கம் உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், பிரிவு ஏற்படும். எதிரிகளால் இடையூறு தீய வழியில் செல்ல சந்தர்ப்பம் அமையும். என்கிறது ஜோதிட சாஸ்திரம். இக்காலத்தில் வரவு செலவில் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும். உடல் நிலையிலும் கூடுதல் கவனம் செலுத்தி வரவேண்டும். செலவுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் ஒவ்வொன்றிலும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ராகு – கேது சஞ்சாரப் பலன்
மூன்றாம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு பகவான் சஞ்சரிக்கிறார் என்பதால், இக்காலத்தில் உங்களுக்கு ஆசைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். முன்பிருந்ததை விட அனைத்திலும் வேகம் அதிகரிக்கும். உங்கள் திறமை போற்றப்படும். பெருமை கூடும் என்றாலும், மனதில் ஒரு பக்கம் குழப்பம் இருக்கும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். எதிர்பாலினரால் உங்கள் வாழ்க்கை திசைமாறும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு மறுமணம் நடந்தேறும். இருக்கும் இடத்தைவிட்டு வெளியூர் சென்று வாழவேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும். இந்த நேரத்தில் ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், திருமண வயதினருக்கு திருமணம் தாமதமாகும், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, ஒற்றுமையில் சங்கடம், உடல் நலக்குறைவு, பிரிவு, பிளவு என்பவற்றை சந்திக்க நேருமென்பது பொதுவிதி. உங்களுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்து அதிலிருந்து தெளிய வைக்க வேண்டியதுதான் கேதுவின் வேலை என்பதால் அந்த வகையில், உங்களுக்குப் பொருந்தாத, உங்களுக்குத் தகுதி இல்லாதவருடன் உங்களை இணைத்து வைப்பார். அதனால் கணவன் மனைவியரிடையே சண்டையும் சச்சரவும் உண்டாகும். ஒரு சில தம்பதிகள் பிரிவைக்கூட சந்திப்பார்கள். உற்றார் உறவினர்களும் இக்காலத்தில் உங்களுக்கு எதிரியாவார்கள். தீயவர்களை நல்லவர்கள் என்று நம்பிப் பழகி அதனால் தொல்லைக்கு ஆளாவீர்கள். ஒரு சிலர் குடும்பத்தை விட்டு வேறு இடத்திற்குச் சென்று வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் மனம் ஒரு கட்டுக்குள் இல்லாமல் பல வழிகளிலும் செல்லும் என்பதால் உங்கள் நிலையுணர்ந்து இக்காலத்தில் நீங்கள் செயல்படுவதும், தீயோரை ஒதுக்கி வைப்பதும் நன்மையாகும்.
சூரியனால் உண்டாகும் ராஜயோகம்
ஒவ்வொரு கிரகமும் தான் சஞ்சரிக்கும் நிலைக்கேற்ப, சஞ்சரிக்கும் இடத்திற்கேற்ப பலன்களை வழங்குவது போல், சூரிய பகவானும் அவரவர் ராசிக்கு 3, 6, 10, 11 ம் இடங்களில் சஞ்சரிக்கின்றபோது ஜாதகருக்கு ராஜ யோகத்தை ஏற்படுத்துவார். மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களை கட்டுப்படுத்துவார். பாதிப்புகளிலிருந்து விடுவிப்பார். அக்காலங்களில் ஜாதகரின் செயல்களை எல்லாம் வெற்றியாக்குவார். அந்த வகையில், மீன ராசியினரான உங்களுக்கு, வைகாசி. ஆவணி. மார்கழி. தை ஆகிய நான்கு மாதங்களும் உங்களுக்கு அதிர்ஷ்ட மாதங்களாகவே இருக்கும்.
உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றியாகும். சங்கடங்கள் யாவும் இல்லாமல் போகும். நினைப்பதை நினைத்தபடி நடத்திக் கொள்ளும் நிலை உண்டாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உடலில் இருந்த சங்கடம், பாதிப்பு விலகும். எதிர்ப்புகள் நீங்கும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். தொழிலில், வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடந்தேறும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.
பொதுப்பலன்
குரு பகவான் மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு குரு பார்வை உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். கணவன் மனைவி உறவு பலப்படும். கூட்டுத்தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு உண்டாகும். பாக்ய ஸ்தானத்தையும், லாப ஸ்தானத்தையும் குரு பார்ப்பதால் தெய்வ அருள் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் லாபத்தை உண்டாக்கும். பெண்களின் நிலையில் இக்காலம் நன்மையாக இருக்கும். வியாபாரிகளுக்கு யோகம் உண்டாகும். புதிய சொத்து சேரும். வருமானம் அதிகரிக்கும். விவசாயம் லாபம் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும்.
பரிகாரம்
உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று கடலிலும், நாழிக்கிணற்றிலும் குளித்து முருகப் பெருமானுக்கும், குரு பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டு வருவதுடன், திருப்பாம்புரம் சென்று ராகு கேதுவிற்கு பூஜை செய்து வருவது நன்மையாகும்.