ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அமைந்துள்ள பைசரன் மலையில் தீவிரவாதிகள் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அதிலும் இப்போது கோடைக் காலம் என்பதால் பொதுமக்கள் பலரும் காஷ்மீர் போன்ற குளிர் பிரதேசங்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வந்தனர்.
அழகிய சுற்றுலா தலமாக அறியப்படும் பஹல்காமில் புல்வெளியில் நேற்றைய தினம் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் காயமடைந்தோர் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்கூட்டியே எச்சரித்த உளவுத் துறை
இதற்கிடையே இதுபோன்ற ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக முன்கூட்டியே உளவுத் துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உளவுத்துறை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் இடங்களில் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக காஷ்மீரைச் சேராதவர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தலாம் என உளவுத் துறை எச்சரித்துள்ளது. பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாத குழு, சம்பவத்திற்கு முன்னதாகவே அப்பகுதியில் உளவுப் பணிகளை மேற்கொண்டதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
மொத்தம் 3 முதல் 5 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் நிலத்தடி சுரங்கங்கள் மூலம் ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த பயங்கர தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். குதிரை சவாரி செய்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்
இந்த தீவிரவாத தாக்குதல் நாடு முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இப்போது தேசிய புலனாய்வு முகமை விசாரணையை ஆரம்பித்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா ஸ்ரீநகருக்கு விரைந்துள்ளார். மேலும், காஷ்மீர் முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலை கண்டித்து அங்கு பல்வேறு அமைப்புகளும் இன்று போராட்டங்களையும் அறிவித்துள்ளன. தீவிரவாத தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகள் வெளிமாநிலத்தவரைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். அதேநேரம் இதில் இரண்டு உள்ளூர்வாசிகளும் இரு வெளிநாட்டினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏன் வெளிமாநிலத்தவரை தாக்க வேண்டும், மதத்தை கேட்டு கேட்டு ஏன் கொலைசெய்யவேண்டும் இதற்கும் உள்ளூர்வசிக்கும் எதாவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் வழக்கு திசை திருப்பியுள்ளது மேலும், இதே நிலை நீடித்தால் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர ஆலோசனையில் மத்திய அரசு இறங்கியுளது . பஹல்காமிற்கு தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த புலனாய்வுத் துறை (IB) அதிகாரி ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.