பிரதமர் மோடியின் ஆட்சி! வளர்ச்சிப் பாதையில் டாமன் டையூ – வானதி சீனிவாசன்

நாடு முழுதுவம் பா.ஜ.க வின் மகளிர் அணியை பலப்படுத்துவதில் ஓய்வில்லாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள். டாமன் டையூ யூனியன் பிரேதேசம் மகளிர் அணி செயற்குழுவிற்கு சென்ற வானதி சீனிவாசன் அவர்கள் டாமன் டையூ பகுதி மோடியின் ஆட்சியில் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார். மேலும் அவரின் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது: இந்தியாவில் 28 மாநிலங்களும், 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அதில் ஒன்றுதான் இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ‘தாத்ரா நாகர்ஹவேலி – டாமன் டையூ’ யூனியன் பிரதேசம்.
டாமன் பகுதியை குஜராத் மாநிலமும், அரபிக் கடலும் சூழ்ந்துள்ளன. டாமன் நகருக்குள் பாய்ந்தோடும் ‘டாவன்’ நதி அந்நகரை மோதி டாமன் (பெரிய டாமன்), நனி டாமன் (சிறிய டாமன்) என்ற இரு பகுதிகளாகப் பிரிக்கிறது. இங்குதான் டாவன் நதி கடலில் சங்கமிக்கிறது. டையூ பகுதி ஒரு சிறு தீவாக உள்ளது. குஜராத் மாநிலம், செளராஷ்டிர தீபகற்ப பகுதியின் தென் மூலையில் ‘காம்போ’ வளைகுடாவில் கிர் சோம்நாத் மாவட்டத்தின் கடற்கரை பகுதியையொட்டி இந்த தீவு அமைந்துள்ளது.

இந்தியாவின் மற்ற பகுதிகளைப்போல மன்னர்களால் ஆளப்பட்ட பகுதி. சுமார் 450 ஆண்டுகளாக போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்து வந்திருக்கிறது. 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி போர்ச்சுகீசிய ஆதிக்கத்தின்கீழ் இருந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. அப்போதுதான் டாமன் டையூவும் இந்தியாவின் அங்கமானது.

1987 மே 30-ம் தேதி கோவா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது. அதுவரை கோவா, டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி ஆகிய மூன்று பகுதிகளும் தனி யூனியன்பிரதேசமாக இருந்தது. கோவா தனி மாநிலமானதும் டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலி என்ற இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன.பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வசதியாக கடந்த 2019 டிசம்பரில் இரு யூனியன் பிரதேசங்களும் இணைக்கப்பட்டு ‘தாத்ரா நாகர் ஹவேலி – டாமன் டையூ’ என்ற புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. இந்த யூனியன் பிரதேசத்துக்கு துணைநிலை ஆளுநர் இல்லை. நிர்வாக அதிகாரியும், அவருக்கு கீழே தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளும்தான் ஆட்சியை நடத்துகின்றனர்.

மும்பையில் இருந்து இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு கடற்கரைச் சாலையில் காரில் 5 மணி நேரம் பயணித்து சுமார் 170 கி.மீ. தூரத்தை கடந்து இரவு 1.30 மணிக்கு டாமன் வந்து சேர்ந்தேன். இரவு எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து விட்டு காலையில் மகளிரணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆயத்தமானேன். இந்த யூனியன் பிரதேசத்தின் பாஜக மகளிரணித் தலைவர் சிம்பிள் கட்டேல் என்பவர் என்னை தனது காரில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரதேச பாஜக தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை மரியாதை நிமித்தம் சந்தித்தோம்.

பின்னர், மகளிரணி கூட்டம் நடைபெறும் இடத்துக்கு பயணமானேன். பிரபுல் பட்டேல் என்ற பெயரை கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் உண்மையில் ‘தாத்ரா நாகர் ஹவேலி – டாமன் டையூ’ யூனியன் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி. இங்கு அவரது நிர்வாகத் திறமையையும், அவரால் ஏற்பட்ட வளர்ச்சியையும் கண்டு வியந்த மத்திய பாஜக அரசு, அவருக்கு லட்சத் தீவு நிர்வாக அதிகாரி பொறுப்பை கூடுதல் பணியாக அளித்துள்ளது.டாமன் டையூ பிரதேசத்தில் இப்போது கிராமங்களில்கூட நகரத்தில் இருப்பது போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

சாலைகள், பாலங்கள், பூங்காக்கள், குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி என்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிரபுல் பட்டேல் வந்த பிறகு இந்தப் பிரதேசத்தில் சட்ட விரோதச் செயல்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோன்ற நடவடிக்கையை லட்சத் தீவில் அவர் மேற்கொண்டதால் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களும். அடிப்படைவாதிகளும் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் பிரபுல் பட்டேல் அதிகமாக செய்திகளில் அடிபட்டு வருகிறார்.

டாமன் டையூ பிரதேசத்தில் விவசாயம், மீன்பிடித்தல், மது தயாரிப்பு, விற்பனை ஆகியவை முக்கியத் தொழில்கள். சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதி என்பதால் தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் என்று சுற்றுலா சார்ந்த வணிகமும் இங்கு அதிகம். இந்தப் பிரதேசத்தில் பிறந்த வளர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் கண்டுள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களில் இருந்து வேலைக்காக வந்தவர்களிடம்தான் வறுமையைப் பார்க்க முடிந்தது.
டாமன் நகரில் பாஜக மகளிரணி கூட்டம் நடக்கும் இடத்திற்குச் சென்றோம். 5 ஆண்டுகளுக்கு முன்புவரை குண்டும் குழியுமாக இருந்த இந்தப் பகுதி இப்போது அனைத்து வசதிகளுடன், அழகான சாலைகளுடன் இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

டாமனில் ‘கோலி பட்டேல்” என்ற குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்டவர்களும், ‘தண்டேல்” என்ற மீனவ சமூகத்தினரும் 70 சதவீதம் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கணிசமாக உள்ளனர்.
புதுச்சேரியில் பலருக்கு பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை இருப்பதுபோல, போர்ச்சுகீசிய ஆதிக்கத்தின்கீழ் இருந்த பகுதி என்பதால் டாமன் பிரதேசத்தில் பலருக்கு போர்ச்சுகீசிய குடியுரிமை உள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக லண்டனில் அதிகமானோர் குடியேறியுள்ளனர். தண்டேல் சமூகத்தினரும், கோலி பட்டேல் சமுதாயத்தினரும் நன்றாகப் படித்து வெளிநாடுகளிலும் பணிகளில் உள்ளனர். இரு சமூகத்தினரும் இணக்கமாக வாழ்கின்றனர்.

டாமன் டையூ பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேல் தான் காரணம் என்பதை அப்பகுதி மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர். டாமன் பிரதேச அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை சென்றால், திங்கள்கிழமை மாலை தான் டாமனுக்கு திரும்புவார்களாம். பிரபுல் பட்டேல் வந்த பிறகு இந்த நிலைமை மாறியுள்ளது. வெள்ளிக்கிழமையும், திங்கள்கிழமையும் அரசு அதிகாரிகள் முழுமையாகப் பணியாற்றும் நிலை உருவாகியுள்ளது.

லட்சத் தீவு நிர்வாக அதிகாரியாக கூடுதல் பொறுப்பு கிடைத்ததும் அங்கு நடைபெற்று வரும் சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்தி, வளர்ச்சித் திட்டங்களை முடுக்கி விட்டுள்ளார். அதனால் சமூக விரோதிகள் அவரை குறிவைத்துள்ளனர். பிரபுல் பட்டேலை குறை சொல்பவர்கள் டாமன் டையூ பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள பணிகளை நேரில் பார்த்துவிட்டு குறை சொல்வது நல்லது என்பதே எனது வேண்டுகோள்.

மகளிரணி கூட்டத்தில் பாஜக வளர்ச்சி, பிரதேசத்தின் தேவைகள், பிரச்சினைகள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். டாமனில் பாஜகவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இந்தப் பிரதேசத்தில் இரு மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர். ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் பாஜகவைச் சேர்ந்தவர். உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சித் தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். இதனை நேரில் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

எனது முன்னிலையில் பெண் ஊராட்சித் தலைவர் ஒருவர் பாஜகவில் இணைந்தார். இங்கு நகராட்சி உறுப்பினர்களை ‘நகர் சேவக்’ என்றும், பெண்களாக இருந்தால் ‘நகர் சேவிகா’ என்றும் அழைக்கிறார்கள். கவுன்சிலர் என்பதை அவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை.பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 30 நாள்களில் விசாரித்து மரண தண்டனை உள்ளிட்ட கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகள் வலியுறுத்தினர். தாத்ரா நாகர் ஹவேலியில் வனவாசி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை எனக்கு பரிசளித்தனர்.

டாமன் பிரதேசத்தில் குஜராத்தி உணவுகளே அதிகம் கிடைக்கின்றன. மக்களும் குஜராத்தி உணவு வகைகளையே அதிகம் உண்கின்றனர். மூன்று வேளையும் உணவில் இனிப்பு வகைகள் பரிமாறப்படுகின்றன. டாமன் பிரதேச மகளிரணியினர் காட்டிய அன்பால் எனக்கு பயணக் களைப்பும், தொடர்ச்சியாக சுற்றுப் பயணம் செய்யும் களைப்பும் தெரியவில்லை. டாமனில் இருந்து அழகிய மேற்கு கடற்கரைச் சாலை வழியாக மும்பை வந்து, அங்கிருந்து ஐதராபாத் வந்தடைந்தேன். எனது டாமன் பயணம் என்றென்றும் நினைவை விட்டு அகலாது என்றே நினைக்கிறேன்.

Exit mobile version