பா.ஜ.க தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் 12 கட்டளை! மக்கள் சேவையில் நமக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை

FILE PHOTO: India's Prime Minister Narendra Modi addresses a gathering before flagging off the "Dandi March", or Salt March, to celebrate the 75th anniversary of India's Independence, in Ahmedabad, India, March 12, 2021. REUTERS/Amit Dave

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புது தில்லியில் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக தலைவர்களுக்கு பல விதமான அறிவுரைகளை வழங்கினார் பிரதமர், மேலும் பாஜக தலைவர்கள் மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மக்களுக்கு எவ்வாறு பணி செய்ய வேண்டும் என்பது குறித்து 12 கட்டளைகளைகளை செயற்படுத்த உத்தரவிட்டார். மேலும் இந்த கூட்டத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களும், மக்கள் சேவையில் நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மற்றும் பாரதிய ஜனதா கட்சியினை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், அமைப்பு தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், கட்சியின் செயலர்கள் உட்பட கட்சியின்முன்னாள் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது : பா.ஜ.க மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்து வருகிறோம். மக்களுக்கு சேவை செய்வதில் நமக்கு தான் அதிக கடமைகள் உள்ளன.

பா.ஜ.க தலைவர்கள் மக்கள் சேவை செய்வது மற்ற கட்சியினருக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும். மேலும் மக்கள் மத்தியில் நல்ல பழக்க வழக்கங்களை நம் கட்சியினர் ஏற்படுத்த வேண்டும்.தற்போது நாம் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தில் இருக்கிறோம். இந்த தொற்று காலத்தில் தான் நம் பணி மிக அதிகரித்துஉள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகமாக இருந்த நேரத்தில், மக்கள் சேவையில் பா.ஜ.க வினர் சிலர் முழுமையாக ஈடுபடாதது வருத்தம் அளிக்கிறது

மக்கள் சேவையில் நமக்கு ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. பா.ஜ.க தலைவர்களும், பாஜக தொண்டர்களும் வாரத்தில் ஒரு நாள் உங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று, அந்த பகுதி மக்களுக்கு தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் மையங்களுக்கும் செல்ல வேண்டும். மக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

தொண்டர்களிடம் தலைவர்கள் நெருங்கி பழக வேண்டும். வயதாகிவிட்டதால் ஓய்வெடுத்து வரும் நீண்ட கால தொண்டர்களை நேரிலோ அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.அவர்களின் வாழ்வாதாரம் குறித்து தெரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் கட்சியில் தொண்டர்களிடம் நெருக்கம் ஏற்படும். கொரோனா ஊரடங்கு காலத்தில், என் பொது வாழ்வின் துவக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.க வில் இணைந்து பணியாற்றிய பலரை தொடர்பு கொண்டு பேசினேன். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மக்களை தொடர்பு கொள்வதில் நாம் புதுமைகளை செயல்படுத்த வேண்டும். மக்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.

குஜராத் முதல்வராக இருந்த போது, மாதத்தில் ஒரு நாள் புத்தகம் படிப்பதற்காக ஒதுக்கி வந்தேன். படித்த புத்தகத்தை கட்சியினருடன் விவாதிப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். பா.ஜ.க நிர்வாகிகளும் புத்தகம் படிக்க நேரம் ஒதுக்க வேண்டும். படித்த புத்தகத்தை கட்சியினர் மற்றும் மக்களுடன் விவாதிக்க வேண்டும். இதன் வாயிலாக கட்சியின் சிந்தனைகளை மக்களிடம் பரப்பலாம்.கிராமங்களுக்கு அடிக்கடி சென்று மக்களை சந்திக்க வேண்டும். அங்கு மாதத்தில் ஒரு நாள் துாய்மை பணி மேற்கொள்ளலாம்; விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்.

இதில் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பு மக்களையும் பங்கேற்க வைக்க வேண்டும். அப்போது, மக்களிடம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூற வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்களை கட்சியின் தலைவர்கள், செயலர்கள் ஒளிவு மறைவின்றி மதிப்பிட வேண்டும். திட்டங்களில் சாதகமான விஷயங்களை குறிப்பிடுவதுடன், பாதகமான விஷயங்களையும் குறிப்பிட்டு, எனக்கு தெரிவிக்க வேண்டும். மக்கள் தொடர்பிலும், சேவையிலும் நாம் காட்டும் ஆர்வம் தான் கட்சியை வலுப்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு பிரதமர் பேசினார். : நன்றி தினமலர்

Exit mobile version