ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஒன்பது நாட்கள் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் ஒன்பது நாட்கள் ஆர்.எஸ்.எஸ்., பயிற்சி முகாம் நடந்து முடிந்துள்ளது.ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, வெளிநாடுகளில் ஹெச்.எஸ்.எஸ்., என்ற ஹிந்து ஸ்வயம் சேவக சங்கம் பெயரில் செயல்படுகிறது.

இலங்கை, நேபாளம், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, கென்யா என, 50-க்கும் அதிகமான நாடுகளில், ஹெச்.எஸ்.எஸ்., அமைப்பு செயல்பட்டு வருகிறது.பிரதமர் மோடி வெளிநாடுகளில் நடந்த கூட்டங்களில் பங்கேற்றபோது, அதற்கான ஏற்பாடுகளில், ஹெச்.எஸ்.எஸ்., முக்கிய பங்காற்றியது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 2022 அக்டோபரில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில், பல்வேறு கூட்டங்களில் பங்கேற்றார். அதற்கான ஏற்பாடுகளையும், ஹெச்.எஸ்.எஸ்., தான் செய்திருந்தது.இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நான்கு கட்டங்களாக பயிற்சி முகாம்களை நடத்துகிறது. அதுபோல, வெளிநாடுகளில் இரண்டு கட்டங்களாக பயிற்சி முகாம்களை, ஹெச்.எஸ்.எஸ்., நடத்தி வருகிறது.

அதன்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில், ஏப்ரல் 8 முதல் 16-ம் தேதி வரை, ஒன்பது நாட்கள், ஹெச்.எஸ்.எஸ்., ஆண்டு முகாம் நடந்தது. ‘ஆஸ்திரேலியாவின் ஆறு நகரங்களில் இருந்து, 154 பேர் பங்கேற்றனர்.முகாமில் பங்கேற்றவர்களின் குழந்தைகளை பராமரிக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தோம். முகாமின் நிறைவு விழாவில் உள்ளூர் மக்கள் பிரதிநிதியும், ஆஸ்திரேலிய நிதி அமைச்சரின் பார்லிமென்ட் செயலரும் பங்கேற்றனர்’ என, ஹெச்.எஸ்.எஸ்., நிர்வாகி சுரேஷ் லிம்பானி தெரிவித்தார்.

அதுபோல, ஏப்ரல் 7 முதல் 15 வரை, நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில், ஒன்பது நாட்கள் ஹெச்.எஸ்.எஸ்., முகாம் நடந்தது. இதில் நியூசிலாந்தின் எட்டு நகரங்களைச் சேர்ந்த, 57 பேர் பங்கேற்றனர்.’ஆஸ்திரேலியா, நியூசிலாந்து முகாம்களில் பங்கேற்றவர்களுக்கு ஒரு வேளை உணவை, ஹெச்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்து பரிமாறினர்.’ஹெச்.எஸ்.எஸ்., முகாம்கள், அந்தந்த நாடுகளின் காலநிலை, விடுமுறைக்கேற்ப நடக்கும். பெரும்பாலான நாடுகளில், டிசம்பர் மாதத்தில் இந்த முகாம் நடக்கும்’ என, ஹெச்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version