சர்தார் சரோவர் அணை : நரேந்திர மோடியின் மகத்தான சாதனை! குஜராத்தில் கொங்கு தமிழச்சி வானதி சீனிவாசனின் அனுபவம்!

குஜராத்திற்கு செல்கிறோம் என்றதும் ஒரு இனம் புரியாத உணர்வு என்னை சூழ்ந்து கொண்டது. இந்திய வரலாற்றில் குஜராத்திற்கென்று ஓர் தனித்த இடம் இருப்ப தை யாரும் மறுக்க முடியாது.நமது தேசத் தந்தை மகாத்மா காந்தி, நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேல், காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் மொரார்ஜி தேசாய், இன்றைய பாரதர் பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் சாணக்கியர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிறந்த புண்ணிய பூமி குஜராத்.

சென்னை மாகாணத்தில் இருந்து தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் வசிக்கும் பகுதிகள் ‘தமிழ்நாடு’ என்ற தனி மாநிலம் பிரிந்தது. அதுபோல பம்பாய் மாகாணத்தில் இருந்து குஜராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் பகுதி 1960-ல் ‘குஜராத்’ என்ற தனி மாநிலமாகப் பிரிந்தது. குஜராத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 96 ஆயிரத்து 24 சதுர கிலோ மீட்டர் (தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1 லட்சத்து 30 ஆயிரத்து 58 சதுர கிலோ மீட்டர்).

தமிழகத்தை பரப்பளவில் பெரிய மாநிலமாக இருந்தாலும் மக்கள் தொகை தமிழகத்தைவிட குறைவு. அதனால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. (தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள்). சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 182. (தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள்). குஜராத் என்பது தமிழகம் போன்ற செழுமையான மாநிலம் அல்ல. நீர்வளம் மிகமிகக் குறைந்த, வறண்ட மற்றும் சதுப்பு நிலங்கள் அதிகம் கொண்ட பகுதி. மழைப் பொழிவும் மிகக் குறைவு.

தண்ணீர் பிரச்சினை என்பது குஜராத்தில் தீர்க்கவே முடியாத ஒரு பிரச்சினையாக இருந்தது. நர்மதை நதியில் சர்தார் சரோவார் அணைக்கட்டு கட்ட 1961-ல் நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டது. அதன்பிறகு அமைந்த காங்கிரஸ் ஆட்சிகளில் கிடப்பில் போடப்பட்ட இந்த அணைக்கட்டு திட்டத்தை கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார் குஜராத் முதல்வராக 13 ஆண்டுகள் இருந்த இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.

2017 செப்டம்பர் 17-ம் தேதி இந்த சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இப்போது இந்த அணைக்கட்டு குஜராத்தில் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமதாபாத்தில் நர்மதை கால்வாயில் தண்ணீர் கரை புரண்டோடுவதைப் பார்க்க முடிந்தது. குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு நர்மதை கால்வாய் மூலம் நீர் கொண்டுச் செல்லப்பட்டு குடிநீர், விவசாயத்திற்கு காலங்காலமாக இருந்து வந்த தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டம் சுதந்திர இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட மகத்தான சாதனை என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படி குஜராத்தின் வரலாறுகள், முதல்வராக இருந்த மோடி அரசின் சாதனைகள் பற்றி மகளிரணி நிர்வாகிகளுடன் உரையாடி பலவற்றை தெரிந்து கொண்டேன். ஜூலை 25 ஞாயிற்றுக்கிழமை காலை ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் மகளிரணி மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளுடன் விசாலமான பரப்பில் அமைந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் அமரும் அரங்கும் உள்ளது.

கூட்டத்தின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ உரையைக் கேட்டோம்.மகளிரணி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளில் பாதி பேர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளாக இருந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. குஜராத்தில் 6-வது முறையாக தொடர்ந்து பாஜக ஆட்சியில் உள்ளது. இது பெரும் சாதனையாக, பெருமையளிப்பதாக இருந்தாலும் இதனால் பாஜகவுக்கு பொறுப்புணர்வு மிகமிக அதிகமாக உள்ளது. எடுத்து வைக்கும் எந்தவொரு அடியையும் யோசித்து யோசித்தே எடுத்து வைவக்க வேண்டியுள்ளது.

குஜராத் மாநில பாஜக மகளிரணித் தலைவர் 33 வயதே நிரம்பிய பெண். மாநில துணைத் தலைவர்களில் இருவர் 30 வயதுக்கும் குறைவானவர்கள். மகளிரணி மாவட்டத் தலைவர் என்று இளம்பெண் ஒருவர் என்னிடம் தன்னை அறிமுகப்படுததிக் கொண்டார். அவரது வயது 25. முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று பல நூற்றுக்கணக்கானர் இருக்கும் மாநிலத்தில் இளம் தலைமுறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் எனக்கு வியப்பை அளித்தது.

அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்காத எந்தக் கட்சியும் தொடர்ந்து வெற்றிபெற முடியாது. பாஜக எப்போதுமே இளம் தலைமையினருக்கு முக்கியத்தும் அளிக்கும் கட்சி. அதனால் 43 வயதான எல்.முருகனும், 37 வயதான அண்ணாமலையும் மாநிலத் தலைவராக முடிந்துள்ளது. மற்ற கட்சிகளில் இளைஞர்கள் என்றால் வாரிசுகள் மட்டுமே.

மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு மகளிரணி மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள், மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டுச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டம் முடிந்ததும் குஜராத் மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் விபவாரி டேவ்ஜி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

Exit mobile version