பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு சீருடை கட்டாயம்! கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது !! டாக்டர் க.கிருஷ்ணசாமி`

இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பள்ளிகளிலும், சில கல்லூரிகளிலும் சீருடை அணிந்து வர வேண்டும் என்பது பன்னெடுங்காலமாக இருந்துவரக்கூடிய நடைமுறையும் கட்டாயமும் ஆகும். இன்றையக் குழந்தைகளே நாளைய தலைவர்கள்; குடும்பத்திற்கும், நாட்டிற்கும், உலகத்திற்கும் வழிகாட்டுபவர்கள். சமூகத்தில் நிலவும் சாதி, மத, இன, நிற, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் எந்தவிதத்திலும் பள்ளிக்குழந்தைகள் எனும் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சாகப் பதிந்துவிடக் கூடாது என்ற அடிப்படையில் தான், சமத்துவ, சமதர்ம உணர்வுகளை உருவாக்கக்கூடிய வகையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சீருடை என்பது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பறவையினங்களும், விலங்கினங்களும் கூடக் கூட்டம் கூட்டமாக, ஒருவிதமான சமூக வாழ்க்கையைக் கடைபிடிக்கின்றன.

ஆனால், ஆறறிவு படைத்த மனிதகுலம் எண்ணற்றக் காரணிகளால் பிரிந்துகிடக்கிறது.அண்மையில், கர்நாடகாவில் ஒரு பள்ளியில், ஒரு பிரிவு மாணவியர் ”சீருடை அணியமாட்டோம்; அவர்களுடைய மத அடையாள உடையணிந்து தான் பள்ளிக்கு வருவோம்” என, பிரச்சினையை உருவாக்க, இன்னொரு பிரிவினரும், மத அடையாளத்தோடு பள்ளிக்கு வந்தபிறகு, அது சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாக மாறி, மத, இன மோதல் உருவாகும் சூழல் எழுந்தது. அக்குறிப்பிட்ட மதப் பிரிவு மாணவிகள் தங்களுடைய முகத்தைத் துணியால் மறைப்பது மத ரீதியான அடிப்படை உரிமை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.

இந்தப் பிரச்சினை எழுந்த உடனேயே, கடந்த பிப்ரவரி மாதம் 6-ஆம் தேதி நாம் எழுதிய அறிக்கையில், ”பள்ளிகளில் எந்தவிதமான சாதிய, மத, இன, நிற அடையாளங்களையும் அனுமதிக்கக் கூடாது, கர்நாடகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் சீருடையைக் கட்டாயமாக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தோம். மதத்தை வைத்து இந்தியாவைத் துண்டாட நினைக்கும் சில தீவிரவாத அமைப்புகள் இதற்குத் தூபமிட்டன. கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைச் செலவிட்டு, வழக்கறிஞர்களை நியமித்து நீதிமன்றத்தில் வாதாடினார்கள்.”சத்யமேவ ஜெயதே” அதாவது வாய்மையே வெல்லும் என்பதற்கிணங்க, நியாயமே இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறது.

”பெண்களுக்கான முக கவசம் அந்த மதத்தின் கட்டாயம் அல்ல; எனவே, அதை அவர்கள் வலியுறுத்த முடியாது; அதேபோல, பள்ளி, கல்லூரிகளில் தீர்மானிக்கப்படும் சீருடையை மாணவர்கள் எதிர்க்கக் கூடாது; கண்டிப்பாக அணிய வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பைக் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்திருக்கிறது. இதை நாம் வரவேற்கிறோம். நாம் இப்பொழுது மட்டுமல்ல, தமிழகத்தினுடைய பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தங்களுடைய சாதியை அடையாளப்படுத்தக்கூடிய வகையில், நெற்றியில் பொட்டு இடுவது, கைகளில் கயிறு கட்டுவது போன்ற சம்பவங்களால் பெரிய சச்சரவுகளும் அதனால் உயிரிழப்புகள் எல்லாம் ஏற்பட்டதையெல்லாம் நினைவுகூர்ந்து, பள்ளி கல்லூரிகளில் இது போன்ற சாதி, மத அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது எனத் தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகிறோம்.

எனவே, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்துப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில், சீருடை கட்டாயம் அமலாக்கப்பட இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.மேலும், இத்தீர்ப்பை எந்தவொரு மதப்பிரிவினரும் தங்களுக்குச் சாதகமாகவோ அல்லது எதிராகவோ எண்ண வேண்டிய அவசியம் இல்லை. வீடாக இருந்தாலும் முற்றம் வேறு, வரவேற்பறை வேறு, சமையலறை வேறு, பூஜையறை வேறு என ஒவ்வொன்றையும் வித்தியாசத்தோடே அமைக்கிறோம். அதேபோல, பள்ளி, கல்லூரி எனும் கல்விக்கூடங்கள் என்பவை வேறு, மத ரீதியான வழிபாட்டுத் தலங்கள் என்பவை வேறு. ஒரு தேசத்தில் ஒத்த வயதுடையோரிடத்தில் அமலாக்கப்படும் சீருடையில் தங்களுடைய மத, சாதி ரீதியான அடையாளத்தை வேண்டுமென்ற எண்ணத்தை அனைவரும் விட்டுவிட வேண்டும்; பரந்த, சமத்துவ எண்ணத்தோடு, இந்தியர் என்ற ஒற்றை மனப்பான்மையோடு மட்டுமே இந்தப் பிரச்சினையை அனைவரும் அணுக வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLAநிறுவனர் & தலைவர்,புதிய தமிழகம் கட்சி

Exit mobile version