சேகர் பாபு தனது அதிகார பலத்தினால் எதையாவது செய்ய நினைத்தல் வேறுமாதிரி ஆகிவிடும்!பா.ஜ.க தலைவர் எச்சரிக்கை

“தற்போது கூட பல திருக்கோவில்களில், தங்கப்பத்திரம் திட்டத்தின் படி, வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டு இருக்கின்ற தங்கக்கட்டிகள், அது போல் சமயபுரம், திருச்சி கோவில்களில் ஏற்கனவே ‘கோல்டு பாண்ட்’ திட்டத்தை பயன்படுத்தி, அதில் வருகின்ற வட்டித்தொகைகள் திருக்கோவில்களுக்கு செலவிடுகின்ற நடைமுறை ஏற்கனவே இருந்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கூட அறங்காவலராக இருந்த சோம்நாத் திருக்கோவிலில் கூட இந்த நடைமுறையை மேற்கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

ஆகவே இதில் எந்த தவறும் நிகழாது. பயன்பாடற்ற அந்த பொருள்களை இறைவனுக்கே பயன்படுத்துகின்ற இந்த திட்டத்தில் தவறு நடைபெறுவதற்கு முதலமைச்சர் அவர்களும், இந்து அறநிலைய துறையும் அனுமதிக்காது” என்று கூறியுள்ளார் அமைச்சர் சேகர் பாபு.அமைச்சர் அவர்களே! தங்கத்தின் இறக்குமதியை குறைக்க இந்த திட்டத்தை கொண்டு வந்ததே பாஜக அரசு தான். அவரவர்களின் சொத்தை சேமித்து வட்டி பெறுவதே இந்த திட்டம். ஆனால், நீங்கள் கூறியதில் ஒரு சிறிய திருத்தம். பல திருக்கோவில்களில் ‘கோல்டு பாண்ட்’ திட்டம் அமலில் உள்ளது சரியே.

அதாவது, அந்தந்த கோவில்களில் உள்ள தங்கத்தை உருக்கி, வங்கிகளில் சேமித்து, அதே கோவில்களின் கணக்கிலேயே வட்டியை வரவு வைப்பது தான் சட்டம், நியாயம். ஆனால், அனைத்து கோவில்களின் தங்கத்தையும் சேர்த்து மொத்தமாக உருக்கி, சேமித்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாயை மற்ற கோவில்களுக்கு செலவிடுவோம் என்று சொல்வது சட்டப்படி முறையல்ல. இந்த திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அல்லது ஹிந்து அறநிலைய துறைக்கு அதிகாரமில்லை என்பதை தான் சொல்கிறோம். ‘நகைகள் எந்த கோவிலில் உள்ளதோ அந்த நகைகளுக்கு உரிமையாளர் அந்த கோவிலில் இருக்கும் தெய்வமே’.

நீங்கள் குறிப்பிட்டுள்ள சோம்நாத் திருக்கோவிலும் கூட நகைகளை உருக்கி, சேமிப்பதன் மூலம் பெறும் வட்டி வருவாய், அந்த கோவிலையே சாரும் என்பதை சொல்ல மறந்து விட்டீர்கள்?மேலும், மக்களின் காணிக்கைகளை பயன்பாடற்றது என்று நீங்கள் குறிப்பிடுவது முறையா என்பதை சிந்தித்து பாருங்கள். வேண்டுதல் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை அசைத்து பார்க்கும் இந்த முயற்சியை கைவிடுங்கள். ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டு விட்டு கபாலி கோவிலுக்கோ அல்லது ரங்கநாதர் கோவிலுக்கோ செல்வார்களா பக்தர்கள் என்பதையும் உணருங்கள். அதே போல் தான் காணிக்கைகளும். கோவில்கள் வளம் பெற வேண்டும் என்ற உங்களின், முதல்வரின் நோக்கத்தை நான் விமர்சிக்கவில்லை. ஆனால், நீங்கள் செல்லும் பாதை சட்டரீதியானது அல்ல என்பதோடு மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானதும் கூட என்பதை உணருங்கள்.

இந்த முயற்சியை நிறுத்தி கொள்ளுங்கள். தங்கத்தை உருக்குவதற்கோ, சேமிப்பதற்கோ, அதன் மூலம் வட்டி பெறுவதற்கோ எந்த ஆட்சேபனையும், தடையும் இல்லை. ஆனால், அதை முறையாக, சட்ட ரீதியாக நியாயமாக செய்யுங்கள் என்று தான் சொல்கிறோம். அரசுக்கோ, ஹிந்து அறநிலைய துறைக்கோ தனிப்பட்ட கோவில்களின் நிர்வாகத்தில் / சொத்துக்களில் தலையிட அதிகாரமில்லாத நிலையில், இந்த நடவடிக்கையானது பிற்காலத்தில் மேன்மேலும் பல தவறுகளுக்கு முன்னுதாரணமாகி விடக்கூடாது என்பதால் தான் உங்களுக்கு உணர்த்துகிறோம். மற்ற கோவில்களின் வளர்ச்சிக்கு நிதி தேவையென்றால், ஆன்மீக பூமியான தமிழகத்தில் உள்ள பல கோடி பக்தர்களால் உறுதியாக நிறைவேறும். அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்கு துணை நிற்கிறோம். ஆன்மீக பலத்தினால் அதை சாதிப்போம். அதிகார பலத்தினால் அல்ல.

தமிழக பாஜக மூத்த தலைவரும் செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Exit mobile version