கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த, எஸ்.ஐ., மற்றும் எட்டு போலீசார் கைது.

மதுரை கீரைத்துறை காவல் நிலைய போலீசார், 9ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காரில் கடத்திச் செல்லப்பட்ட, 40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.விசாரணையில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,090 கிலோ கஞ்சா மூட்டைகள், துாத்துக்குடி மாவட்டம், வேலவர் புதுக்குளம் என்ற கிராமத்தில் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று, கஞ்சாவுடன் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பாக செயல்பட்ட போலீசாரை பாராட்டி, 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.

பத்து நாட்களில் மாநிலம் முழுதும், 36 பெண்கள் உட்பட, 1,337 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவர்களில், 42 பேர் வெளி மாநிலங்களில் பதுங்கி இருந்தவர்கள்; 3,408 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது; 164 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனைக்கு உடந்தையாக இருந்த, ஒரு எஸ்.ஐ., மற்றும் எட்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்; 15 போலீசார் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.

Exit mobile version