கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவருமான ராகுல் காந்தி, இந்தியாவின் ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறார். அவரது இந்த அணுகுமுறை, நாட்டின் பாதுகாப்பிற்காக உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்களின் மன உறுதியை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மத்தியில் பிரிவினையையும், நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ராகுல் காந்தியை வெளுத்து வாங்கியுள்ளார் பாஜக மகளிரணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன். ராகுல் காந்தி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
1971-ல் நடந்த போரை, இன்றைய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையோடு ஒப்பிட முடியாது.தேசப் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்.மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு போன் செய்து, ‘நரேந்திரா, சரணடை’ என்று சொன்னதும் அப்படியே செய்தார். இது பாஜக – ஆர்எஸ்எஸ்ஸின் குணம், அவர்கள் எப்போதும் தலைவணங்குகிறார்கள். ஆனால், காங்கிரசின் வரலாறு அப்படி அல்ல. அமெரிக்காவின் அச்சுறுத்தலையும் மீறி 1971-ல் இந்தியா பாகிஸ்தானை உடைத்தது” என வரலாற்றை திரித்து உண்மைக்கு மாறாக பேசியிருக்கிறார்.
1971-ல் தனிநாடு கேட்டுப் போராடிய கிழக்கு வங்காளத்தைச் (பங்களாதேஷ்) சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, இந்திய ராணுவத்தை அனுப்பியதை இன்றைய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையோடு காங்கிரஸ் கட்சியினர் ஒப்பிட்டு வருகின்றனர். இது மிகவும் தவறானது. வரலாற்று புரிதல் இல்லாதது.
1947-ல் சுதந்திரம் அடைந்தபோது பாகிஸ்தான் உடன் கிழக்கு வங்காளம் இணைக்கப்பட்டது. ஆனால், இரு பகுதிகளுக்கும் நிலத்தின் வழி இணைப்பு இல்லை. இதனால், இயல்பாகவே கிழக்கு வங்காளத்தில் இருந்தவர்கள் தனிநாடு கோரி போராடி வந்தனர். பாகிஸ்தானுக்கும், கிழக்கு வங்காளத்துக்கும் இடையே மோதல் மூண்டதால் பல லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில், கிழக்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். அவர்களை சமாளிக்க முடியாமல், கிழக்கு வங்காளம், ‘பங்களாதேஷ்’ என்ற தனி நாடாக உருவாக உதவ வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. அதைத்தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி செய்தார்.
ஆனால், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்திய போதெல்லாம், அதற்கு காங்கிரஸ் அரசு எவ்வித பதிலடியும் கொடுக்கவில்லை. கடந்த 2008 நவம்பர் 26 ஆம் தேதி இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில், கடல் வழியாக வந்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 164 பேர் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் போன்ற நமது நாட்டின் எல்லைப் பகுதியில் அல்ல, நாட்டின் மையப் பகுதியான, முக்கியமான வர்த்தக மையமான மும்பையில் நடந்த தாக்குதலுக்கு கூட அன்றைய காங்கிரஸ் அரசு பதிலடி கொடுக்கவில்லை. வழக்கம்போல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்ற சமாதான நடவடிக்கைகளையே மேற்கொண்டது.
ஆனால், பாஜக தலைமையில் அரசு அமைந்த போதெல்லாம், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உரிய நேரத்தில், உரிய பதிலடி கொடுக்கப்பட்டது. 1999-ல் காஷ்மீரின் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறிய போது, அன்றைய பிரதமர் வாஜ்பாய் தக்க பதிலடி கொடுத்தார். கார்கில் போரில் இந்தியா வென்றது. அது போன்ற பதிலடியை காங்கிரஸ் அரசு என்றும் கொடுத்ததில்லை.
கடந்த 2019 பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமா பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், நமது பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நடத்திய துல்லிய தாக்குதலில், பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுபோன்ற ஒரு பதிலடி தாக்குதலை காங்கிரஸ் அரசு எப்போதும் நடத்தியதில்லை.
அதுபோல, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், ராணுவ நிலைகள் மீது நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியது. தங்களது ராணுவ நிலைகள், முக்கியமான இடங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தானே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியினருக்கும், ராகுல் காந்திக்கும் ஒப்புக்கொள்ள மனமில்லை. அதனால்தான் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.
“இந்தியா மீது இனி யார் பயங்கரவாத தாக்குதல் நடத்தினாலும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும். ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது” என்று, பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தி இருக்கிறார். நமது இந்திய ராணுவம் பாகிஸ்தானின் மீது போர் தொடுக்கவில்லை. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுத்தது. மத்திய பாஜக அரசு, எப்போதுமே உள்நாட்டுப் பிரச்சனையில், மூன்றாவது நாடு தலையிட அனுமதித்தது இல்லை. இப்போதும் போர் நிறுத்தத்தில் மூன்றாவது நாடு தலையிடவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கு பணிந்து விட்டதாக ராகுல் காந்தி திரும்பத் திரும்ப பொய் சொல்லி வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மிகப்பெரும் மக்கள் செல்வாக்கு மிக்க பிரதமர். உறுதியான, துணிச்சலான, அறிவாற்றல் மிக்க தலைவர். அவர் யாருக்கும் அடிபணிபவர் அல்ல. இதை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால், ராகுல் காந்திக்கு புரிந்தும், புரியாதது போல நடித்துக் கொண்டிருக்கிறார். காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்யலாம் என்று ராகுல் காந்தி நினைத்தால் நிச்சயம் ஏமாந்து போவார். தேசப் பாதுகாப்பு விவகாரத்தில், பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டையும் மக்கள் நம்ப மாட்டார்கள். ஏனெனில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கரங்களில் தான் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்பது இந்திய மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அதனால்தான் எந்த குடும்ப பின்னணியும் இல்லாத நரேந்திர மோடி தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார். இதை உணர்ந்து தேசப் பாதுகாப்பு விகாரத்தில் அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும. இல்லை எனில் அதற்கு மக்கள் சரியான தண்டனையை தருவார்கள்.என கூறியுள்ளார்.