ஊடகங்களுடன் காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாடிய மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு ராம் விலாஸ் பஸ்வான், தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் முக்கியமான திட்டங்களான பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம்- 1 & 2, தற்சார்பு இந்தியா திட்டம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்துப் பேசினார். ஏழைகள், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் இருக்கும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை சேர்ந்தவர்கள் வரலாறு காணாத இந்த நெருக்கடியின் போது உணவு தானியங்கள் கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்னும் எண்ணத்தில், அனைத்து பொது விநியோகத் திட்டப் பயனாளிகள் மற்றும் பொது விநியோகத் திட்ட அட்டை இல்லாதவர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் எந்த உணவு தானியத் திட்டமும் சென்றடையாதவர்களுக்கு உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவற்றை வழங்குவது தான் இந்த மத்திய அரசுத் திட்டங்களின் முக்கியமான நோக்கமாகும். பொருள்கள் அனுப்பப்பட்ட தகவல்கள், எடுத்துச் செல்லப்பட்ட விவரங்கள், உணவு தானியங்கள் மற்றும் பருப்புகள்/சென்னா ஆகியவை பயனாளிகளிடம் விநியோகிக்கப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்திய உணவுக் கழகம், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் உள்ள இதர நிறுவனங்களைப் பாராட்டிய அவர், இந்திய உணவுக் கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருப்பில் இருப்பதாகக் கூறினார். உணவு தானிய விநியோகப் பணிகளை அடிமட்ட அளவில் அவ்வப்போது அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும், உள்ளூர் அளவில் கூட்டங்களை நடத்தி பயனாளிகளிடம் இருந்து பெறப்படும் உணவு தானிய விநியோகம் குறித்த எந்தப் புகாரையும் கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒரேநாடு, ஒரேகுடும்பஅட்டை ஊடகங்களிடம் பேசிய திரு. பஸ்வான், தேசியப் பெயர்வுத்திறன் வசதியில் ஏற்கனவே இணைந்திருந்த 20 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் உத்திரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 1 ஆகஸ்டு, 2020 அன்று இணைந்ததாகத் தெரிவித்தார். தற்போது மொத்தம் 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் இணைந்துள்ளன. இதன் காரணமாக, குடும்ப அட்டைகளின் தேசியப் பெயர்வுத்திறன் வசதியின் மூலம், மொத்த தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் 65 கோடி (80 சதவீதம்) பயனாளிகள் இந்த மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் எங்கு வேண்டுமானாலும் உணவு தானியங்களைப் பெற முடியும். மீதமிருக்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் தேசிய பெயர்வுத்திறன் வசதியில் மார்ச் 2021-க்குள் இணைவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கிட்டத்தட்ட 2.98 லட்சம் குடும்ப அட்டைகளில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்ட சம்பவத்தைப் பற்றி குறிப்பிட்ட திரு பஸ்வான், அவர்களது பெயர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அவர்களின் பெயர்களை இணைத்துக் கொண்டு குடும்ப அட்டைகளை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கோண்டார். ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் குறித்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர பங்குதாரர்களிடம் இருந்து நேர்மறை பின்னூட்டங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறை பெற்று வருவதாகத் தெரிவித்த அவர், குடும்ப அட்டைதாரர்கள் அவர்களது உணவு தானியப் பங்கை எந்தவித தாமதமும், தடங்கலும் இல்லாமல் பெறுவதை உறுதி செய்ய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆந்திர பிரதேசம், பீகார், தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் டாமன் & டையு, கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து, ஒதிசா, ராஜஸ்தான், பஞ்சாப், சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்திரகாண்ட் ஆகியவை இந்த 24 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஆகும். தேசியஉணவுப்பாதுகாப்புதிட்டம்: சுமார் 81 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்கள் (கோதுமை/அரிசி/பச்சை தானியங்கள்) தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின் 91 சதவீத நிதிச் சுமையை இந்திய அரசு ஏற்றுக்கொள்வதாகவும், வெறும் 9 சதவீத நிதிச் சுமையைத் தான் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் இதை அங்கீகரித்து, இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்கும் போது இவை மத்திய அரசு நிதியுதவியுடன் வழங்கப்படுவதாக அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மொத்தஉணவுதானியஇருப்பு: உணவு தானிய விநியோகப் பணியைப் பற்றி பேசிய திரு பஸ்வான், வெள்ளத்தின் காரணமாக சில மாநிலங்களில் உணவு தானிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானியங்களை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து ஒரே தவணையில் மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், இந்திய உணவுக் கழகத்தின் 06.08.2020 தேதியிட்ட அறிக்கையின் படி, 241.47 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசியும், 508.72 லட்சம் மெட்ரிக் டன்கள் கோதுமையும் தற்சமயம் இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் இருப்பதாகக் கூறினார். எனவே, மொத்தமாக 750.19 லட்சம் மெட்ரிக் டன்கள் கையிருப்பில் உள்ளது. உணவுப் பாதுகாப்புத் திட்டம், பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு உணவுத் திட்டம் மற்றும் இதர நலத் திட்டங்களின் கீழ் ஒரு மாதத்துக்கு 95 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தேவைப்படுகின்றன. ஜூலை 2020-இல், 42.39 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 1514 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 191.83 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் 6851 ரயில் பெட்டிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டுள்ளன. ரயில் மார்க்கம் தவிர, சாலை மற்றும் நீர்வழிகளிலும் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 285.07 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், 13.89 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஜூன் 30, 2020 வரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 87.62 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் நாட்டின் இதர பகுதிகளுக்கும், ...