மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல் காணொலி வாயிலாக இன்று (04.02.2021) உரையாற்றினார். இந்திய ரயில்வே தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், “2021 நிதிநிலை அறிக்கை, இந்திய ரயில்வேக்கு வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குகிறது. இந்திய ரயில்வேயில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டுள்ள மூலதன செலவு பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தற்சார்பு இந்தியாவை நோக்கி இந்திய ரயில்வேயை வழிநடத்தவும் உந்துசக்தியாக இருக்கும்”, என்று கூறினார். இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரக மந்திரம் குறித்து பேசிய திரு கோயல், “முன்னுரிமைகளை வழங்கி, வளங்களை பிரித்தளித்து, திட்டங்களை விரைவாக முடிவடையச் செய்வதே இந்திய ரயில்வேயின் மேலாண்மைக்கான தாரகமந்திரமாகும்”, என்று குறிப்பிட்டார். இந்திய ரயில்வேக்கு 2021-22 நிதிநிலை அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள ரூ. 1,10,055 கோடி தொகையில் ரூ. 1,07,100 கோடி மூலதன செலவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதிநிலை மதிப்பீடுகளை விட ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 37,050 கோடி (53%) அதிகமாகும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய ரயில்வேயின் உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.