தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜக கலந்து கொள்ளாது இருக்கும் இந்நேரத்தில், இன்றைக்கு நடந்த ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் தொடர்ந்து வைக்கப்பட்ட ஒரே கேள்வி தமிழகத்திற்கு வெறும் 510 கோடி தானா என்பதே.கலந்து கொண்டவர்களில் ஒருவர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்.
மற்றொருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். பத்திரிகையாளர் ஒருவர், பொருளாதார வல்லுநர்(?) ஒருவர் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் ஒருவர்.ஆனால் ஒருவர் கூட உண்மை என்ன என்று தெரிந்து பேசவில்லை அல்லது தெரிந்தும் தெரியாது மறைத்தனர்.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியானது மாநில பேரிடர் நிதி மற்றும் வருவாய் பற்றா குறை மானியம் ஆகியவையே. மத்திய அரசு ரூபாய் 17,287 கோடியை மாநிலங்களுக்கு கொடுத்துள்ளது. அதில் ரூபாய் 11,092 கோடி மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்கு.
அந்தந்த மாநிலங்களின் கணக்கில் உள்ள, ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள அந்தந்த மாநிலங்களுக்கு சேரவேண்டிய தொகையை உடனடியாக செலுத்தியுள்ளது. மீதமுள்ள 6195 கோடி வருவாய் பற்றாக்குறை மானியமாக தகுதிக்கேற்ப அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது அனைத்துமே, அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்ட 15வது நிதி ஆணையத்தின் படி வழங்கப்படுகிறது என்பது ஆட்சியில் இருக்கின்ற அல்லது ஆட்சியில் உள்ள கட்சிகளுக்கு, அரசியல் வாதிகளுக்கு தெரியும்.
அதாவது ஏற்கனவே இருப்பில் உள்ள அந்தந்த மாநிலங்களுக்கு சேர வேண்டிய சேமிப்பு அல்லது மாநிலங்களும், மத்திய அரசம் ஒப்புக்கொண்ட அவசர நிதி என்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும், உயர்நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது என்று அழுத்தி சொல்வது மத்திய அரசின் மீது கலங்கத்தை, அவதூறை உருவாக்க முனைவது தெளிவாக தெரிகிறது. மாநில பேரிடர் நிதி என்பது பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் நிதி. கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அவசர தேவைக்காக அந்தந்த மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அப்படியே அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கி விட்ட நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு பேசுபவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள் மட்டுமல்ல, ‘எரிகின்ற நெருப்பில் மேலும் எண்ணெயை ஊற்றுவது’ போன்ற குற்றச்சாட்டுக்களே.
மேலும், இன்று ஒரு நபர் இது குறித்து உயர்நீதி மன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதற்கு உயர்நீதி மன்றம் ஏன் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது என்று விளக்குமாறு உத்தரவிட்டுள்ளது. தெளிவாக மத்திய அரசு இது குறித்து விளக்கம் அளிக்கும். அதற்குள்ளாகவே நீதிமன்றம் கேள்வி கேட்டு விட்டது என்று வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு விமர்சிப்பது நாகரீகமல்ல. மேலும் பல்வேறு நிதி பங்களிப்பை மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி 987 கோடி, விவசாயிகளுக்கு கௌரவ நிதி, பெண்களுக்கு நேரடியாக ரூபாய் 500 வங்கிக்கணக்கில் செலுத்துவது, கட்டுமான மற்றும் கட்டிட வைப்பு நிதியை பயன்படுத்த அனுமதி,எரிஉருளை மானியம் உட்பட பல்வேறு நிதி பங்களிப்பை மத்திய அரசு செய்து வருகிற நிலையில், தமிழக மக்களை குழப்பு விதத்தில் ஊடகங்களில் விவாதம் செய்யப்படுவதும், செய்திகள் வெளிவருவதும் இடர்மிகுந்த இந்த காலத்தில் செய்யும் மலிவு அரசியலே.
கட்டுரை :- நாராயணன் திருப்பதி,
செய்தி தொடர்பாளர்,பாரதிய ஜனதா கட்சி.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















