தமிழக சட்டப் பேரவை – நூற்றாண்டு விழாவா?! வரலாற்றை மாற்றி திணிக்கப்பட்ட விழாவா? சர்ச்சையை கிளப்பும் சட்டப் பேரவை

1914 – 1918 ஆம் ஆண்டு நடந்த முதலாம் உலகப் போருக்குப் பின்னர், தேச பக்தர்கள், நமது நாட்டிற்கு சுதந்திரம் வேண்டி, தங்களுடைய போராட்டத்தை தீவிரப் படுத்தினர். அந்த போராட்டத்தை ஆங்கிலேயர்கள் அடக்க நினைத்தனர்.

ரவுலட் சட்டம் :

1917 ஆம் ஆண்டு “சர் சிட்னி ரவுலட்” தலைமையில் குழு அமைக்கப் பட்டு, அவர்களின் பரிந்துரைப்படி, 1919 ஆம் ஆண்டு மார்ச் மாதம், “ரவுலட் சட்டம்” (Rowlatt Act) நடைமுறைப் படுத்தப் பட்டது. அதன் படி, சந்தேகத்திற்கு இடமான முறையில், யாரையும் கைது செய்ய முடியும், யாரேனும் கூடி பேசினாலோ, எந்த வித விசாரணையும் இல்லாமல் கைது செய்து, சிறையில் அடைக்க முடியும். தேச பக்தர்களிடையே, இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

ஜாலியன் வாலாபாக் படுகொலை :                                     

ஏப்ரல் 13, 1919 ஆம் ஆண்டு, பஞ்சாபில் நடைபெற்ற அறுவடை திருவிழாவான “பைசாகி” அன்று, மக்கள் ஒன்று கூடினர். அப்போது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, “ஜெனரல் டயர்” (General Dyer) உத்தரவின்படி சுட்டதில், பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் இன்னுயிரை நீத்தனர். இந்தத் துயரச் சம்பவம்,  நாடு முழுக்க மிகுந்தக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஒத்துழையாமை இயக்கம் :

1920 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஒத்துழையாமை இயக்கத்தை  மகாத்மா காந்தி அவர்கள் அறிவித்தார்.  ஆங்கிலேயர்களின் எந்தவித செயலுக்கும், ஒத்துழைக்காமல் இருப்பதே அதன் நோக்கம்.அதனால் அன்றாடப் பணிகளை செய்ய முடியாமல், ஆங்கிலேயர்கள் தவித்தனர்.

கடந்த காலத் துயரச் சம்பவங்களால், மிகவும் கோபம் கொண்டு இருந்த நமது மக்களை சமாதானப் படுத்த, “மாண்டேகு – செம்ஸ்போர்டு” (Montagu – Chelmsford) பரிசீலனை செய்த சீர்திருத்தங்களை செய்ய, பிரிட்டிஷ் அரசு முன் வந்தது.

அதன்படி, முழுமையாக இந்தியாவிற்கு சுயாட்சி கொடுக்க முடியாது எனவும், இரட்டை ஆட்சி முறையை நடைமுறைப் படுத்த முன் வந்தனர். தேர்தலும் பெயரளவுக்கு மட்டுமே நடத்தப் படும், மற்றபடி, ஆட்சியும் நிர்வாகமும் ஆங்கிலயரிடமே மிகுந்து இருக்கும். இது போன்ற சீர் திருத்தத்திற்கு, அன்றைய தேச பக்தர்கள் யாரும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அப்போது நடந்த தேர்தலை, அவர்கள் புறக்கணித்தார்கள்.

மாண்டேகு – செம்ஸ்போர்டு (Montagu – Chelmsford) சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்:

  1. சட்டமன்ற சபைகள் விரிவு படுத்தப் பட்டன. இரட்டை ஆட்சி முறையில், கூடுதல் அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப் பட்டது.
  2. அதன் படி, மேலவையில் 60 உறுப்பினர்களும், கீழவையில் 145 உறுப்பினர்களும் இருப்பார்கள்.
  3. அரசு கவுன்சில் எனப்படும் மேல் சபையில் 26 நியமன உறுப்பினர்களும், 34 தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மொத்தமாக 60 பேர் இருப்பார்கள், ஆயுட்காலம் 5 ஆண்டுகள்.
  4. கீழவையில் 41 நியமன உறுப்பினர்களும், 104 தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்களும், மொத்தமாக 145 பேர் இருப்பார்கள், ஆயுட்காலம் 3 ஆண்டுகள்.
  5. கவர்னர் ஜெனரலுக்கும், நிர்வாகக் குழுவிற்கும், சட்டமன்றத்தின் மீது எந்த வித கட்டுப்பாடும் இருக்காது. ஆனால், மாகாண அரசாங்கத்தின் மீது கட்டுப்பாடு இருக்கும்.
  6. வாக்கு உரிமை மிகவும் கடுமையாக்கப் பட்டது. எல்லா நிர்வாக சபைகளிலும், பாதி எண்ணிக்கையில் இந்தியர்கள் இருப்பர். அனைத்து சட்ட மன்றங்களிலும், இந்தியர்கள் பெரும் பான்மையுடன் இருப்பார்கள்.
  7. சுப்ரீம் கவுன்சிலில் 150 உறுப்பினர்களும், பெரிய சபையில் 100 உறுப்பினர்களும், சிறிய மாகாணங்களில் 50 உறுப்பினர்களும் இருப்பர்.
  8. நகராட்சிகள், உள்ளூர் வாரியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரால் நடத்தப் படும்.
  9. விரிவான வாக்குரிமை அடிப்படையில், நேரடித் தேர்தல் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரை ஒவ்வொரு மாநிலமும் கொண்டு இருக்க வேண்டும்.
  10. உள்நாட்டு அரசுகளைப் பொறுத்த வரை, அரசர்களின் மன்றம் அமைக்கப்பட்டு, தலைமை ஆளுநர் தலைமையில் அது நடைபெற வேண்டும்.

இரட்டை ஆட்சி முறை (Dyarchy):

நிர்வாகத்தின் பொறுப்பு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்த முறைக்கு “இரட்டை ஆட்சி முறை” என்ற பெயருடன் அழைக்கப் பட்டது. 

நிதி, நிர்வாகம், காவல் படை, செய்தித் துறை, நீர்ப்பாசனம், நிலவரி, வேளாண்மைக் கடன், பஞ்ச நிவாரணம், சிறைச் சாலைகள் போன்ற அனைத்தும் “பிரிட்டிஷ் ஆளுனரின் நேரடி நிர்வாகக் குழு கட்டுப்பாட்டில்” நிர்வகித்தனர்.

உள்ளாட்சி, மருத்துவம், கல்வி, பொதுப் பணி போன்றவை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட “இந்திய சட்ட மன்றங்களின் கட்டுப்பாட்டில்” நிர்வகித்தனர். இதனை நீட்டிக்கவும், கலைக்கவும் ஆளுநருக்கு முழு அதிகாரம் இருந்தது.

ஏப்ரல் 1 ஆம் தேதி, 1921 ஆம் ஆண்டு  8 மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது.

1921ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் முக்கிய அம்சங்கள்:

நீதிக்கட்சி:

ஜமீந்தார்களால்,  தோற்றுவிக்கப் பட்ட “நீதிக்கட்சி” ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்தது. தேர்தலில் பங்கு பெற்று, தமிழகத்தில் நீதிக் கட்சி ஆட்சி அமைத்தது. நீதிக் கட்சியின் வழியில் வந்ததே, தற்போது இருக்கும் “திராவிட கட்சிகள்”.

சென்னையுடன், பாம்பே, அசாம், வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா, மற்றும் சில மாகாணத்திற்கும் தேர்தல் நடைபெற்றது. இங்கு நடைபெற்றது போல, அந்தந்த மாநிலங்களில், நூற்றாண்டு விழா எதுவும், எங்கும் கொண்டாடப் படவில்லை.

இன்னும் நிறைய சலுகைகளைக் கொடுத்து, பிரிட்டிஷ் அரசு 1937 ஆம் ஆண்டு தேர்தலை நடத்தியது. அதில் காங்கிரஸ் கலந்து கொண்டு, ராஜாஜி அவர்கள் தமிழக முதல்வராக தேர்ந்து எடுக்கப்பட்டார். எதிர்த்து நின்ற நீதிக் கட்சி, படு தோல்வி அடைந்தது.

1937 ஆம் ஆண்டு நடந்த தேர்தலை கருத்தில் கொண்டே, முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள், 1987 ஆம் ஆண்டை ஐம்பதாவது  ஆண்டாக கருதி, “சட்டமன்ற பொன் விழா” நிகழ்ச்சி கொண்டாடினார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், 1952 ஆம் ஆண்டு தேர்தல் நடந்தது. அதன் பின்னர்,  இந்தியா எங்கும் தொடர்ந்து, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

தேச பக்தர்கள் அனைவரும் புறக்கணித்த, 1921 ஆம் ஆண்டு தேர்தலில், போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சி அமைத்த, நீதிக் கட்சியின் வழித் தோன்றலான திராவிடக் கட்சிகள், தற்போது தமிழக சட்ட மன்றத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடியது அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என தேசபக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்து நடைபெற்ற 1937 ஆம் ஆண்டு தேர்தலில், அன்றைய தேசபக்தர்கள் நிரம்பிய காங்கிரஸ் கட்சியுடன் போட்டியிட்டு,  நீதிக்கட்சி படுதோல்வி அடைந்ததே, அதற்கு சான்று.

முறைப்படி பார்த்தால், 2021 ஆம் வருடம், தமிழக சட்ட மன்றத்தின் நூற்றாண்டு விழா அல்ல என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வின் மூலமாக,  தங்களின் பெயரை கல்வெட்டில் பொறிக்க எண்ணி, விழா நடத்தப் பட்டதோ? என சமூக வலைத்தளங்களில், பலரும் ஐயம் தெரிவித்து வருகின்றனர்!?

                                        –  அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

Exit mobile version