அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது குறித்து -அண்ணாமலை..

பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், உதவி கமிஷனர் கந்தக்குமார் ஆகியோர் அவசர கதியில் கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

கார்த்திக் கோபிநாத் மற்ற யடியூப்பர்களை போல் இல்லாமல், நாகரீகமாகவும் விருப்பு வெறுப்பு இன்றியும் தமிழக அரசியலை விமர்சனம் செய்பவர். ஆளுங்கட்சி மீது விமர்சனம் வைத்தாலும், தனது கருத்துகளை நாகரீகமாக பதிவு செய்பவர். எந்த சூழ்நிலையிலும் அநாகரீகமான வார்த்தைகளையோ, ஆபாசமான கருத்துகளையோ கூறாதவர். இவர் சமீபகாலமாக, ஆளும் திமுக அரசு பற்றி விமர்சனம் செய்து வந்தார்.

அவரை ஆவடி போலீசார், திடீர் என கைது செய்து கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர் மீது என்ன குற்றச்சாட்டுகளை வைத்து வழக்கை ஜோடிக்கலாம் என்று நீண்ட நேரம் போலீசார் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதற்கு காரணம், ஆளும் கட்சியை விமர்சனம் செய்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டதை கோர்ட் ஏற்கவில்லை. ஏனெனில், கைது செய்ததற்காக வலுவான காரணங்களை போலீசாரால் நிரூபிக்க முடியவில்லை. இதனால், கோர்ட்டின் கண்டனத்திற்கும் போலீசார் ஆளாகி, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‛‛கார்த்திக் கோபிநாத் விஷயத்தில் கோர்ட்டிடம் குட்டு வாங்கக் கூடாது என்பதில் ஆவடி போலீஸ் கவனமாக இருக்கிறது. கோர்ட்டின் கண்டனத்திற்கு ஆளாகாமல் கார்த்திக் கோபிநாத்தை எந்த சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யலாம் என்று போலீசார் ஆலோசித்து வருகின்றனர். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் அவர் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டிருக்கலாம் ” என்றார்

சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‛‛அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் போலீசார் ஒருதலைப்பட்சமாக நடக்கின்றனர். சிதம்பரம் நடராஜர் பற்றி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் கருத்து தெரிவித்த யடியூப்பர்களை கைது செய்ய வேண்டும் என்று சிவனடியார்கள் நுாற்றுக்கணக்கில் கூடி போராடினர். ஆனால், போலீசார் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஆளுங்கட்சியை நாகரீகமாக விமர்சனம் செய்த கார்த்திக்கோபிநாத்தை அவசர கதியிலும், அதிவேகத்திலும் கைது செய்துள்ளனர். இவரை கைது செய்த வேகத்தை, தொடர்ந்து ஹிந்து மதம் மீது அவதுாறுகளை பரப்பும் மற்ற விமர்சகர்களிடம் ஏன் போலீஸ் காட்டுவதில்லை. ஆளும் திமுக அரசு, இந்த விஷயத்தில் ஒரு கண்ணில் வெண்ணெயும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது அப்பட்டமாக தெரிகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது” என்றனர்.

Exit mobile version