டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையை சட்ட விரோதம் என அறிவிக்க கோரி டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் தமிழகத்தில் தற்போது சில்லறை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் மது உற்பத்தி நிறுவனங்களின் மது வகைகள் விற்கப்படுகிறது.இந்த நிலையில், நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் கணக்கில் காட்டாமல் தனியார் மது உற்பத்தி நிறுவன உரிமையாளருடன் சேர்ந்து முறைகேடு நடப்பதாக புகார் கூறப்பட்டது.
இதனையடுத்து அந்த தகவலின் அடிப்படையில் சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர். ஒரு சில இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், சென்னை, புதுக்கோட்டை, கோவை , ஆகிய பகுதிகளில் சோதனை 8ஆம் தேதி வரை நீடித்தது. சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூர் டாஸ்மாக், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் சொந்தமான அக்காடு டிஸ்டிலர்ஸ் மதுபான நிறுவனம் அக்கார்டு ஹோட்டல், ஆயிரம் விளக்கு உள்ள எஸ்என்ஜெ டிஸ்டிலரீஸ், டி நகரில் உள்ள கால்ஸ் மதுபானம், சிவா டிஸ்டிலரீஸ், மயிலாப்பூர் ஆர் கே சாலையில் உள்ள எம்ஜிஎம் மதுபானம் நிறுவனம் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை வரை சோதனை நடைபெற்ற நிலையில், சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்தது.இதையடுத்து, அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும், இந்த சோதனையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தனிதனியாக வழக்குகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் 6 நாள்கள் விசாரித்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில் கூறியிருப்பதாவது, “சட்டவிரோத பண பரிமாற்றம் முறைகேடு என்பது நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமைக்கு எதிரானது. இதுபோன்ற குற்றச் செயல்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையை ஏற்படுத்தும்.இந்த குற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற சோதனையை அமலாக்கத்துறை மூலம் நடத்தப்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், இதுபோன்ற குற்றச்சாட்டை ஒரு நல்ல நீதிபதிகள் ஏற்க மாட்டார்கள். நீதிபதிகளை பொறுத்தவரையில், நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதா? என்பதைத்தான் பார்க்க முடியுமே தவிர, அரசியல் உள்ளதாக என்பதை பார்க்க முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிரான அமலாக்கத்துறை கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது. அதனால், அமலாக்கத்துறை சோதனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் சட்டப்படி மேல் நடவடிக்கை எடுக்கலாம்.” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
