சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்க மைசூரு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‘டீ’யில் வரையப்பட்ட வித்தியாசமான ஓவியத்தை பரிசளிக்க, ஓவியர் ஒருவர் ஆவலுடன் காத்திருக்கிறார்.ரயில் நிலையத்தில் டீ விற்று இன்று நாட்டின் பிரதமராகவும், உலக நாடுகளில் பலம் வாய்ந்த தலைவராகவும் திகழ்பவர் நரேந்திர மோடி. மைசூரில் வரும் 21 ல் நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், அவர் பங்கேற்கிறார். இதை ஒட்டி, நகரம் புதுப்பொலிவு அடைந்து வருகிறது.
இந்நிலையில், நகரின் சாமராஜேந்திரா அகாடமி ஆப் விசுவல் ஆர்ட்ஸ் மாணவரான அனில் போகசெட்டி, பிரதமருக்கு தனித்துவம் வாய்ந்ததாகவும், நினைவாகவும் இருக்கும் வகையில், பரிசளிக்க திட்டமிட்டார்.அப்போது தான், ‘அனமார்பிக்’ எனும் சிதைந்த பொருளை, உருளை கண்ணாடியில் பார்க்கும் போது சரியான வடிவத்தில் தெரியும் ஓவியத்தில் கெட்டிக்காரரான இவர், வெறும் மூன்று மணி நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை, ‘டீ’ மூலம் வரைந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:இந்த ஓவியத்தை சாதாரணமாக பார்த்தால், சிதைந்தது போன்று காட்சியளிக்கும். ஆனால், ‘உருளை கண்ணாடி’யை, ஓவியத்தின் மீது வைத்து பார்க்கும்போது, அந்த உருவம் சரியானதாக தெரியும்.மைசூரு வரும் பிரதமரிடம் இந்த ஓவியத்தை கொடுக்க முடியுமா என்பது தெரியாது. ஆனாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் உரிய அனுமதி பெற்று, கொடுக்க முயற்சிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.16ம் நுாற்றாண்டில் அறியப்பட்ட, ‘அனமார்பிக்’ எனும் இந்த நுட்பத்தை கற்க, அனில் போகசெட்டிக்கு, பத்து ஆண்டுகளானது என்பது குறிப்பிடத்தக்கது.
source dinamalar