சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் துவங்கி வைத்தார்.

சென்னை – இலங்கை இடையே பயணியர் கப்பல் சேவையை, மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.மத்திய அரசு, ‘சாகர்மாலா’ திட்டத்தின் கீழ், நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணியர் கப்பலை இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

‘எம்வி எம்பிரஸ்’ என்ற பெயரில் இயக்கப்பட உள்ள இந்த புதிய பயணியர் கப்பலை, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால், சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இந்த கப்பல் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன் ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு முதல் ஐந்து இரவுகளுடன் கூடிய பயணம் கொண்ட ‘பேக்கேஜ்களுடன்’ சுற்றுலா கப்பலாகவும் இயக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு பின், மத்திய அமைச்சர், வர்த்தக மேம்பாட்டு திட்டம் குறித்த கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து, 2022 – 23ம் கல்வி ஆண்டில் சென்னை துறைமுக பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு விருது வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version