இந்திய நாட்டில் தமிழகம்,கேரளம்,குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புராதனங்களாக கருதப்படும் கோவில்களில் இருந்து சிலை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே சிறப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது.
இந்தியாவிலிருந்து புராதானப் பொருட்கள், அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதை தடுக்க வகை செய்யும் ஒப்பந்தத்தில், இந்தியாவும், அமெரிக்காவும் கையெழுத்திட்டுள்ளன.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 46-வது உலக பாரம்பரிய குழுவின் கூட்டத்திற்கு இடையே,இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில், மத்திய கலாச்சாரத்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திரு எரிக் கேர்செட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.யுனெஸ்கோவின் 1970-ம் ஆண்டு உடன்படிக்கைக்கு ஏற்ப, கலாச்சார உடைமைகள் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தியாவின் செழுமையான, பன்முக கலாச்சார பாரம்பரியம் மற்றும் நமது பழம்பெரும் வரலாற்றுக் காலத்து விலை மதிப்பற்ற கலைப்பொருட்களை தாயகத்திற்கு மீட்டு கொண்டுவருவதில் இந்த ஒப்பந்தம் முக்கியமானது என்றார்.
கலாச்சார உடைமைகள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தடுப்பதற்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இது அமையும் என்று குறிப்பிட்ட அவர், கடத்தப்பட்ட புராதானப் பொருட்களை அவற்றின் மூல இடத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதே நோக்கம் என்று தெரிவித்தார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















