இந்த திட்டத்தை திரும்பப் பெற வாய்ப்பே இல்லை – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அதிரடி !

அக்னிபத் திட்டத்தை திரும்ப பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த திட்டம் ஒரே நாள் இரவில் கொண்டு வரப்பட்டது அல்ல. நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுள்ளது. மனித வளம், தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி ராணுவத்தை மறுசீரமைப்பது மற்றும் மறுகட்டமைப்பது குறித்து ஆராய கடந்த 1970 முதல் பல குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு இளைஞருக்கும் நாட்டை காக்க வேண்டும் என்ற ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருக்கும். அவர்களது ஆற்றலும் திறமையும் நாட்டை வலிமையாக்க உதவுகிறது.

போராட்டம் நடத்துவது, எதிர்ப்பு குரல் எழுப்புவது போன்றவற்றை நியாயப்படுத்த முடியும். அது ஜனநாயகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடப்பது வன்முறை. இந்த வன்முறையை அனுமதிக்க முடியாது. சகித்து கொள்ள முடியாது. வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீவிர விசாரணைக்கு பின்னர், இந்த வன்முறைக்கு பின்னணியாக செயல்பட்டவர்கள் யார் என்பது தெரியவரும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்.

அக்னிபத் திட்டம் தொடர்பாக இளைஞர்களிடம் தெரியாத பயம் உள்ளது. வேண்டுமென்றே தவறான புரிதல்கள் உருவாக்கப்படுகின்றன. அல்லது புரிதல் இல்லாமல் இருக்கலாம்.சிறந்த எதிர்காலத்திற்கு சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. நமது நாடு, பழமையான ராணுவம் கொண்ட இளமையான நாடு. கடந்த 2014ல் மோடி பிரதமராக பதவியேற்ற போது, இந்தியாவை எப்படி வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதே அவருக்கு முதன்மையான நோக்கமாக இருந்தது.

4 ஆண்டு பணிக்கு பிறகு, அக்னிவீரர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளம் வயதினராக இருப்பார்கள். சான்றிதழ்கள் மற்றும் திறமை பெற்றிருப்பார்கள். தங்களிடம் உள்ள பணத்தை முதலீடு செய்யலாம். எனவே, நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன செய்வோம் என்ற பயம் கொள்ள தேவையில்லை. பணம் சம்பாதிப்பதற்காக யாரும் ராணுவத்தில் சேர்வது கிடையாது. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகின்றனர். நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றால், உங்களுக்கு ராணுவத்தில் இடமில்லை.

இரண்டு வகையான எதிர்ப்பாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர், நாட்டிற்காக சேவை செய்தவர் உண்மையிலேயே கவலைப்படுவார். அவர்களிடம் ஏதோ தெரியாத பயம் மட்டும் இருக்கும். பெரிய மாற்றத்திற்கு முன்பு ஏற்படுவது வழக்கம். தற்போது, அக்னிபத் திட்டம் நீண்ட கால திட்டம் என்பதை மக்கள் இப்போது படிப்படியாக புரிந்து வருகிறார்கள். இது நல்ல நடவடிக்கை என்பதை உணர துவங்கி உள்ளனர்.

மற்றொரு குழுவினர் உள்ளனர். அவர்கள் நாட்டை பற்றியும், நாட்டின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படாதவர்கள். சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர். கல் எறிதல், வன்முறை மற்றும் ரயில்களை எரிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சமூக விரோதிகள். வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் மக்களை தவறாக வழிநடத்துவார்கள்.

உண்மையான அக்னிவீரரை தவறாக வழிநடத்த முடியாது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட ராணுவத்தில் சேர தயாராகி வருவார்கள். மாறாக வன்முறையில் ஈபடுவர்களுக்கு ராணுவத்தில் சேர்வதில் விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள்.சீனாவுடன் நீண்ட காலமாக எல்லை பிரச்னை உள்ளது. எந்த அத்துமீறலையும் பொறுத்து கொள்ள மாட்டோம் என்ற நமது நோக்கத்தை சீனாவிடம் தெளிவாக கூறியுள்ளோம். அவர்கள் புரிந்து வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version