உ லகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளுக்கு மதச்சாயம் பூசும் விவகாரம் தமிழர்களை அதிர வைத்திருக்கிறது.
கடந்த 5ம் தேதி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் எஸ்ரா சற்குணம் நடத்தி வரும் கிறிஸ்தவ இயல் கல்லூரியில், திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய நூல் வெளியிடப்பட்டது. அதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டு பேசுகையில், ‘திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர், அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்துதான் திருக்குறளை வள்ளுவர் எழுதியுள்ளதாக, நூலாசிரியர் தெய்வநாயகம் எழுதியுள்ள கருத்து ஆய்வுக்குரியது என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், ‘வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். சமீபத்திய காலத்துப் புள்ளிவிவரம், சைவமும் வைணவமும் ஆரிய மதம் அல்ல’ என்கிறது. இந்தியாவில் உள்ள 108 வைணவக் கோயில்களில் 106 தமிழகத்தில்தான் உள்ளது. 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் தமிழர்கள். மேலும், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி உள்ளனர். எந்த ஒரு மதத்தையும் உருவாக்கவில்லை. தமிழர்கள், திராவிடர்களின் சமயம்தான் சைவம், வைணவம். நம் மதங்களின் மீதான ஆக்கிரமிப்பில் இருந்து நாம் விடுபட வேண்டும்.
கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் எதிரான மத வெறுப்பு பிரசாரம் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சனாதனத்தை
எதிர்க்காமல் சமூக நீதியை நிலைநாட்ட முடியாது. அதற்கு திருக்குறள் ஆயுதமாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையில் ஏந்தாமல் திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக உள்ளது” என்று பேசினார்.
திருமாவின் கருத்தை எதிர்க்கும் பா.ஜ.க. செய்தி தொடர்பாளரும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் பேசினோம்.
“திருவள்ளுவரை மதம் மாற்றும் முயற்சி கடந்த 100 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தெய்வநாயகம் முதல் பலரும் இந்த செயலை செய்து வருகின்றனர். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் திருவள்ளுவரை சமணராக, கிறிஸ்தவராக மதம் மாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.
மேலும், ரோமில் இருந்து வந்த தாமஸ் சொல்லிக்கொடுத்துத்தான் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார் என்ற கட்டுக் கதையை திருமாவளவன் சொல்லியுள்ளார் இதைக் கேட்கும் போது ஒவ்வொரு தமிழனுக்கும் கோபம் வரவேண்டும். இதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாதக சீமான் ஆகியோருக்கு கோபம் வரவேண்டும். ஆனால் வரவில்லை. எனவே. தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளவேண்டும்.
நான்மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த நூல்முறையை வந்திக்க சென்னிவாய் வாழ்த்துகதல் நெஞ்சம், சிந்திக்க கேட்க செலி என்ற பாடலுக்கு அவர்கள் விளக்கம் சொல்லத் தயாரா? சங்ககால பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி அரசவையில்தான் திருக்குறள் இயற்றப்பட்டது. இதன் பொருள் 4 வேதங்களில் சொல்லப்படும் மெய்ப்பொருள்தான் 3 பால்களாக திருக்குறளில் சொல்லப்பட்டுள்ளது. பிரம்மனே தனது உலகிற்கு இறங்கிவந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டு, திருவள்ளுவராக அவதாரம் எடுத்து திருக்குறளை இயற்றினார் என்பது பொருள். எனவே, திருமாவளவன் கருத்து கடும் கண்டனத்திற்கு உரியது” என்று சுண் சிவந்தார்.
வள்ளுவரை சர்ச்சையில் சிக்க வைக்கலாமா.?
கட்டுரை குமுதம் ரிப்போட்டர்.