சமூகநீதியை காக்கும் மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது ராமதாஸ் !

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றனை வெளியிட்டுள்ளார் அதில்மத்திய அரசில் இணை செயலாளர்கள் நிலையிலான நேரடி நியமனங்கள் ரத்து வரவேற்கத்தக்கது: இனி அனைத்து பணிகளும் இடஒதுக்கீட்டு விதிப்படியே நிரப்பப்பட வேண்டும்.

மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பல்வேறு நிலையிலான 45 அதிகாரிகளை நேரடியாக நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சமூகநீதியை காக்கும் வகையிலான மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என்பதால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டி, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்படியே இந்த முறை நியமன அறிவிப்பை ரத்து செய்யும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

காலம் காலமாக இழைக்கப்பட்டு வரும் அநீதியை போக்கவும், உள்ளடக்கியத் தன்மையை ஏற்படுத்தவும் அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் நமது சமூகநீதிக் கட்டமைப்பின் அடித்தளம் என்பதிலும்,

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமனங்கள் செய்யப்பட்டாலும் அதிலும் சமூகநீதி தத்துவம் இணைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரதமர் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலகத்திற்கான மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியிருப்பது நம்பிக்கையளிக்கிறது. மத்திய அரசுப் பணிகளில் சமூகநீதி என்பது என்ன விலை கொடுத்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள் உள்ளிட்ட நிலைகளில் தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிப்பதாக இருந்தாலும், தற்காலிக அடிப்படையிலும், ஒப்பந்த அடிப்படையிலும் செய்யப்படும் நியமனங்களாக இருந்தாலும்,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நிலைப்பாட்டை ஒட்டி, அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும். இதை கொள்கை அறிவிப்பாகவே மத்திய அரசு வெளியிட வேண்டும்.என குறிப்பிட்டுள்ளார்

FacebookTwitterWhatsAppMessengerTelegramWeChatLineShare
Exit mobile version