அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) டிசம்பர் காலாண்டில் ரூ.262 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த காலாண்டு ஒரு சிறப்பான காலாண்டாய் BSNL நிறுவனத்திற்கு அமைந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணம் உயர்வை அறிவித்தன. இதனால் விரக்தி அடைந்து பலர் தங்களுடைய ஆபரேட்டரை BSNL-க்கு மாறினர். இதனால் BSNL சந்தாதாரர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இது போன்ற சில காரணங்களினால் டிசம்பர் காலாண்டில் அதிக நிகர லாபம் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா BSNL நிறுவனத்திற்கு இது குறிப்பிடத்தக்க திருப்புமுனை என்று பாராட்டினார். BSNL நிறுவனம் தொடர்ந்து தனது சேவையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அதோடு செலவு குறைப்பு நடவடிக்கைகளையும் சேர்த்து செய்ததால் வாடிக்கையாளரின் அதிகரிப்பு பிஎஸ்என்எல்-க்கு ஒரு நல்ல மாற்றமாக அமைந்தது.
மொபிலிட்டி, ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட லைன் சேவைகள் ஆகியவற்றில் கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 14 முதல் 18% அதிக வருவாய் வளர்ச்சியை BSNL இந்த காலாண்டில் கண்டுள்ளது. அதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 8.4 கோடியாக இருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை டிசம்பர் மாதம் 9 கோடியாக உயர்ந்தது. 2024 முதல் 2025-ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில், 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக காலாண்டு அடிப்படையில் அதிக லாபம் பதிவாகியுள்ளதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
கூடுதலாக BSNL-இன் நிதிச் செலவுகள் மற்றும் ஒத்துமொத்த செலவினங்களும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ. 1800 கோடிக்கும் மேல் செலவுகள் குறைந்தது. அதோடு நிறுவனத்தின் EBITDA என்று சொல்லப்படும் வட்டி, வரி, தேய்மானம், மற்றும் கடன் தொகைக்கு முந்தைய வருவாய் ஆகியவை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரட்டிப்பாகி 2024-ஆம் நிதியாண்டில் ரூ. 2100 கோடியை எட்டியுள்ளது.
முக்கிய நடவடிக்கைகள் மற்றும் 4G விரிவாக்கம், நேஷனல் WiFi ரோமிங், BiTV, IFTV மற்றும் சுரங்கத்திற்கான இந்தியாவின் முதல் தனியார் 5G இணைப்பு போன்ற சேவைகளுடன் BSNL வாடிக்கையாளர் சலுகைகளை மேம்படுத்தி வருகிறது.
நாடு தழுவிய 4 ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் BSNL தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக 1 லட்சம் டவர்களை அமைக்கவும் திட்டமிட்டிருந்தது. தற்போது இதில் 75,000 டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 60,000 டவர்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் அனைத்து டவர்களையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு வைத்துள்ளதாகவும் சிந்தியா கூறியுள்ளார்.
தொடர்ச்சியான வருவாய் வளர்ச்சி மற்றும் குறைக்கப்பட்ட செலவினங்களுடன் பிஎஸ்என்எல் லாபத்தை தக்க வைத்து இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா போன்ற நிறுவனங்களுடன் கடும் போட்டியின் நிலவி வருகிறது. திமுக காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நிறைந்ததாக காணப்பட்ட நிறுவனம் தற்போது மோடியின் ஆட்சியில் லாபத்தில் சென்று கொண்டிருக்கிறது.