மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரியும் மேற்குவங்கத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கார் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாக வெளிப்படையாக பேசினார். இதற்கிடையே இந்த விவகாரத்தைக் கொல்கத்தா காவல்துறை ஆதாரங்களை அழிக்க முயல்வதாகப் பயிற்சி மருத்துவரின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.இது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்தை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரித்தனர். இருப்பினும், போலீசார் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், இந்த வழக்கு விசாரணையைக் கொல்கத்தா ஐகோர்ட் சிபிஐ தரப்பிற்கு மாற்றியது.
இந்தச் சூழலில் பயிற்சி மருத்துவர் கொலையில் ஆதாரங்களை போலீசார் மறைத்துவிட்டதாக உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். ஜாதவ்பூர் பகுதியில் நடந்து வரும் போராட்டங்களில் கலந்து கொண்ட உயிரிழந்த மருத்துவரின் தந்தையும் உறவினர்களும் போலீசார் மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பேசிய பெண் மருத்துவரின் உறவினர், “கொல்கத்தா போலீசாரும் கல்லூரி நிர்வாகமும் இந்த சம்பவத்தை மூடிமறைக்க முயல்கின்றன. ஏன் அவர்கள் எப்போதும் ஆதாரங்களை மறைக்கவே முயல்கிறார்கள்? அவரது உடலைப் பார்க்கக் கூடப் பெற்றோரை உடனடியாக அனுமதிக்கவில்லை. சுமார் நான்கு மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது.
குற்றம் நடந்த அந்த செமினார் ஹாலுக்குள் பெற்றோரைக் கடைசி வரை அனுமதிக்கவில்லை ஏன்? குற்றம் நடந்த இடம் என சொன்னால் யாரையும் அனுமதித்து இருக்கக்கூடாத. ஆனால், பலர் செமினார் ஹாலுக்குள் சர்வ சாதாரணமாக சென்றுவிட்டு வெளியே வந்தனர். அவர்களை எல்லாம் அனுமதித்த போலீஸ் பெற்றோரை மட்டும் அனுமதிக்க மறுத்தது ஏன்.. இந்த கொடூர சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆகிவிட்டது..
எதையோ மறைக்கவே அவசர அவசரமாக அனைத்தையும் செய்கிறார்கள். போலீசாரே இதுபோல செய்தால்.. நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவோம். பயிற்சி மருத்துவர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு எப்போதும் ஆதரவு இருக்கும் நீதி கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர வேண்டும்” என்றார்.
அதேபோல அவரது தந்தையும் கொல்கத்தா போலீசாரை விமர்சித்தார். மகளின் மரணத்தால் தனது குடும்பமே சிதைந்து போய்விட்டதாகக் கூறிய அவர், ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “எல்லாம் ஒரே நாளில் முடிந்துவிட்டது. எங்கள் கனவுகள் சிதைந்துவிட்டன. மருத்துவ மாணவர்களின் போராட்டம் எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தரும் என நம்புகிறேன். உங்களின் போராட்டம் தான் எங்களுக்கு வலிமையைத் தருகிறது” என்று கண்ணீருடன் கூறினார்.
என்ன நடந்தது: கடந்த மாதம் 9ம் தேதி பயிற்சி மருத்துவரின் உடல் ஆர்ஜி கர் மருத்துவமனையில் உள்ள செமினர் ரூமில் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாள் இந்த வழக்கில் கொல்கத்தா போலீதார் சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.பயிற்சி மருத்துவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.