4 மாதங்களாக நிதி ஒதுக்காததால் ஆதிதிராவிட மாணவர் விடுதிகள் தவிப்பு.

ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு, கடந்த நான்கு மாதங்களாக உணவுத் தொகை வழங்கப்படாததால், விடுதி காப்பாளர்கள், காய்கறி, முட்டை போன்றவற்றை வாங்க முடியாமல், கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், மாணவர் விடுதிகள் 837, மாணவியர் விடுதிகள் 494 நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு உணவுக் கட்டணமாக, மாதம் 1,000 ரூபாய்; கல்லுாரி மாணவர்களுக்கு 1,100 ரூபாய், அரசு சார்பில் வழங்கப்படுகிறது.சோப்பு, எண்ணெய், முடி வெட்டுதல் போன்றவற்றுக்காக, பள்ளி மாணவர்களுக்கு மாதம், 100 ரூபாய், கல்லுாரி மாணவர்களுக்கு, 150 ரூபாய் வழங்கப்படுகிறது.

விடுதி மாணவர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அரிசி, பருப்பு போன்றவை, நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் இருந்து வழங்கப்படுகின்றன. மளிகை பொருட்கள், கூட்டுறவு அங்காடிகளில் வழங்கப்படுகின்றன.வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை; நான்கு நாட்கள் கொண்டைக் கடலை, உணவுடன் வழங்கப்படுகின்றன.

தினசரி சமையலுக்கு தேவையான காய்கறிகள், முட்டை போன்றவற்றை, விடுதி காப்பாளர்கள் தினசரி வெளி மார்க்கெட்டில் வாங்குகின்றனர். சமையல் காஸ் சிலிண்டரையும், விடுதி காப்பாளர்களே வாங்குகின்றனர்.அரசு சார்பில், 1 கிலோ அரிசி, 1 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அரிசி, மளிகைக்குரிய தொகை போக மீதித் தொகை, விடுதி காப்பாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும், மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிட்டு வழங்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை, உணவு கட்டணத் தொகை, அரசால் வழங்கப்பட வில்லை. தற்போது, காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பல மாதங்களாக உணவுக் கட்டணம் வராததால், விடுதி காப்பாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இது குறித்து, விடுதி காப்பாளர்கள் சிலர் கூறியதாவது:

வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசியை வாங்கி வருகிறோம். அதை விடுதிக்கு எடுத்து வர, வாகன கட்டணம் தருவதில்லை.காய்கறிகள், முட்டை போன்றவற்றை, விடுதி அருகில் உள்ள கடைகளில் வாங்குகிறோம். அரசு பணம் வழங்கியதும், திரும்ப கொடுப்போம்.

நான்கு மாதங்களாக பணம் வழங்கப்படாததால், எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து வருகிறோம்.அதேபோல், காஸ் சிலிண்டர்களையும் நாங்களே வாங்குகிறோம். மாதம் குறைந்தது, ஐந்து சிலிண்டர்கள் தேவைப்படும்; அதற்கும் பணம் வழங்க வேண்டி உள்ளது.

அரசு உடனடியாக உணவு கட்டணத் தொகையை வழங்க வேண்டும். இல்லையெனில், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Exit mobile version