ஊரடங்கு காலமான மார்ச் 26ஆம் தேதியில் இருந்து இன்று வரை 518 உயிர்காக்கும் உதான் விமானங்கள் 875 டன் உயிர்காக்கும் மருத்துவப் பொருள்களை தேவைப்படும் இடங்களுக்கு 4,92,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய மருத்துவப் பொருள்களை ஏற்றிச் செல்லும் உயிர்காக்கும் உதான் விமானங்களை இயக்கி சேவை புரிந்த கொரோனா போர் வீரர்களுக்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
கோவிட்-19 காரணமாக நம்நாட்டில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடையில் மருந்துகள் உள்ளிட்ட சரக்குப் போக்குவரத்தைப் பெரிதும் பாதித்தது. சாலை மற்றும் ரெயில் போக்குவரத்திற்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அத்தகைய நெருக்கடியான சூழலில் உயிர்காக்கும் உதான் விமானச் சேவையானது விரைவாக மருந்துப் பொருள்களை ஏற்றிச்சென்று உயிர்களைக் காப்பாற்றியது. இந்தச் சரக்கு விமானங்கள் மருந்துகளை மட்டும் ஏற்றிச் செல்லவில்லை. விரைவில் அழுகக்கூடிய காய்கறிகளைக் கூட வெளிநாடுகளுக்கு இந்த விமானங்கள் ஏற்றிச் சென்றுள்ளன. இத்தகைய சேவையானது ஏற்றுமதியாளர்களுக்குப் பெருமளவில் உதவியாக இருந்தது. இந்த விமான சரக்குப் போக்குவரத்தில் தனிநபர் பாதுகாப்பு உபகரணம் (PPE), முகக்கவசங்கள் மற்றும் விரைவில் சென்று சேர வேண்டிய இதர அத்தியாவசியப் பொருள்களும் உள்ளடங்கும். சென்னைக்கும், சூரத்திற்கும் இடையில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர வர்த்தக சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு தனியார் விமான நிறுவனம் ஒன்று சரக்கு விமானங்களை இயக்கியது. பாதுகாப்பு முகக்கவசங்கள் மற்றும் கோவிட்-19 உடன் தொடர்புடைய இதர பொருள்கள் வான்வழியாக விரைவில் எடுத்துச் செல்லப்பட்டன.
மருந்து விநியோகக் கம்பெனியின் இயக்குநர் திரு. ஏ.முருகானந்தம் ஊரடங்கு காலகட்டத்தில் மருந்துப் பொருள்களைத் தடையில்லாமல் விநியோகிக்க வேண்டிய தேவையை வலியுறுத்துகின்றார். பலவிதமான கட்டப்பாடுகளுக்கு இடையில் சாலை வழியே இத்தகைய சரக்குகளை ஏற்றிச் செல்வதை விட உயிர்காக்கும் உதான் சேவை மிகப் பெரிய உதவியாக இருக்கிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் சரக்கு விமானங்கள் மருந்துப் பொருள்களை ஏற்றிச் சென்றதோடு அழுகிவிடக் கூடிய பொருள்களையும் ஏற்றிச் சென்றன. திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து தனியார் சரக்கு விமானம் ஒன்று சிங்கப்பூருக்கு ரூ.8 இலட்சம் மதிப்பிலான கத்தரிக்காய், வெண்டைக்காய், வாழைப்பழம் உள்ளிட்ட காய்கறிகளை ஏற்றிச் சென்றது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 3.3 மெட்ரிக் டன் அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காய்கறிகளை திருச்சியில் இருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு ஏற்றிச் சென்றது. ஊரடங்கு காலகட்டத்தில் கோயம்புத்தூர் போன்ற தமிழ்நாட்டு விமான நிலையங்களில் இருந்து ஷார்ஜாவிற்கு 33 டன் காய்கறிகள் மற்றும் பூக்கள் உள்ளிட்ட சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் இருந்து இந்திய விமானப்படை விமானங்கள், அலையன்ஸ் ஏர் மற்றும் இதர தனியார் விமான நிறுவன விமானங்களின் மூலம் மும்பை மற்றும் லக்னோவிற்கு மருத்துவ உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல இந்திய விமானப்படை, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட், அலையன்ஸ் ஏர், இண்டிகோ ஆகிய நிறுவனங்களின் விமானங்கள், புளூடார்ட் சரக்கு விமானங்கள் மற்றும் பவன் ஹன்ஸ் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மத்திய அரசின் குறிப்பிடத்தக்க முன்னோடி நடவடிக்கையான உயிர்காக்கும் உதான் திட்டம் அவசர மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பொருள்கள் தேவைப்படுவோருக்கு நம்பிக்கை ஒளியை கொண்டு வருகின்றன.