சுரங்கத்துக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கிது தயார் நிலையில் மருத்துவ உதவிகள் !

உத்தரகண்டில் உள்ள உத்தரகாசி – யமுனோத்ரியை இணைக்கும் விதமாக, நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சில்க்யாரா – தண்டல்காவ்ன் இடையே உள்ள மலையை குடைந்து, சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி, சுரங்கப் பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால், பாதையின் மறுமுனையில் பணியில் ஈடுபட்டு இருந்த, 41 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கினர். அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள், கடந்த, 11 நாட்களாக நடந்து வருகின்றன.

இதையடுத்து, உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை, சிறிய குழாய்கள் வழியாக அனுப்பப்பட்டன. இந்நிலையில், 15 செ.மீ., விட்டம் உடைய குழாய், இடிபாடுகளுக்கு உள்ளே செலுத்தப்பட்டது. அந்த குழாய் வாயிலாக, ‘எண்டோஸ்கோப்பி’ கேமரா, நேற்று முன்தினம் செலுத்தப்பட்டது. அந்த கேமரா வாயிலாக உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுடன், மீட்புப் படையினர் பேசினர். பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாரும் பேசினர். இதையடுத்து, மீட்புப் பணியில் புதிய வேகம் ஏற்பட்டது.

சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 51 மீட்டர் துளையிட வேண்டிய நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 45 மீட்டருக்கு துளையிடப்பட்டிருந்தது. தொடர்ந்து கிடைமட்டத் துளையிடும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். சில்க்யாரா பகுதியில், சுரங்கத்திற்கு அருகே ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி மருத்துவ உதவிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்கள் இன்று(நவ.,23) மீட்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனையில் 41 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version