பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை தமிழக துணை முதல்வராக நியமிக்க வேண்டும்-வானதி சீனிவாசன்

oredesam Vanathi Srinivasan

தமிழகத்தின் துணை முதல்வராக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கப்படவேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை :
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திருமதி. திரௌபதி முர்மு அவர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

பா.ஜ.கவுக்கு இதுவரை மூன்று முறை, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பிரதமராக இருந்தபோது, 2002ஆம் ஆண்டு முதல் முறையாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு பா.ஜ.கவுக்கு கிடைத்தது. அப்போது, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் அவர்களை குடியரசுத் தலைவராக பாஜக தேர்வு செய்தது.

திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமரான பிறகு 2017இல் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் வாய்ப்பு பாஜகவுக்கு கிடைத்தது. அப்போது பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த திரு. ராம்நாத் கோவிந்த் அவர்களை குடியரசுத் தலைவராக பாஜக தேர்வு செய்தது.

இப்போது வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முறை ஒடிசா மாநிலத்தின் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரெளபதி முர்மு அவர்களை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது.
பாஜகவை பொறுத்தவரை ‘சமூக நீதி’ என்பது வெறும் பேச்சு, எழுத்து மட்டுமல்ல. மேடைகள் தோறும் “சமூக நீதி, சம நீதி, சமத்துவம், சகோதரத்துவம்” என்று முழங்கிவிட்டு அவர்களுக்கு, அரசியல் அதிகாரம் கொடுக்காமல் ஏமாற்றுவது தான் இந்த நாட்டில் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
ஆனால், பாஜகவை பொறுத்தவரையில் ‘சமூக நீதி’ என்பது உயிர்மூச்சு. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் உள்ள மக்களுக்கு வாய்ப்புகளை பாஜக வழங்கி வருகிறது.

இந்திய அரசியல் வரலாற்றிலேயே, அதிகமான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மத்திய அமைச்சர்களாக இருப்பது தற்போதைய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் தான். பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான்.

காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் நாங்கள் பட்டியலின், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன செய்திருக்கிறோம் என்று அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தக் கட்சிகளின் நோக்கம் அவர்களின் வாக்குகளை அறுவடை செய்வது மட்டுமே. ஆனால் பாஜகவின் நோக்கம் அவர்களுக்கு தேவையானவற்றை, அவர்களே செய்து கொள்ளும் அளவுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, மத்திய அமைச்சர்களாக, மாநிலங்களின் முதல்வராக வந்துவிட்டால் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்வார்கள். அவர்களை முடிவெடுக்கும் இடத்திற்கு, திட்டங்களை செயல்படுத்தும் இடத்திற்கு அதாவது கொடுக்கும் இடத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பதே பாஜகவின் சமூக நீதி.
அரசியல் அதிகாரம் கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

இன்னும் எத்தனை காலத்திற்குத்தான், அவர்களை வாங்கும் இடத்திலேயே வைத்திருப்பது? கொடுக்கும் இடத்திற்கு அவர்களை மாற்றுவது தான் உண்மையான சமூக நீதி. அதன் இதுதான் பாஜக அரசியல் கொண்டிருக்கிறது.

சமூக நீதி தான் எங்களின் உயிர்நாடி கொள்கை என்று முழங்கி வரும் திமுகவுக்கு இப்போது அதனை செயல்படுத்த ஒரு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நாட்டின் மிக உயர்ந்த குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரெளபதி முர்மு அவர்களை திமுக ஆதரிக்க வேண்டும். அதுபோல தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க, பட்டியலின சமுதாயத்தினருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முன்வரவேண்டும். பட்டியலின வகுப்பை சேர்ந்த ஒருவரை துணை முதல்வராக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் நியமிக்க வேண்டும் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள பட்டியலின சமுதாயத்தினருக்கு அரசியல் அதிகாரம் வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version