வாரம் ஒரு தி.மு.க., ஊழல் பட்டியலை வெளியிடுவோம் : அதிரடி அண்ணாமலை அறிவிப்பு.

‘தி.மு.க., அரசின் இரு ஊழல்களை, அடுத்த மாதம் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். இதனால், அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களின் உணர்ச்சிகரமான வரவேற்பை பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டதாக கூறினார். அவரது பேச்சில் தமிழ் கலாசாரத்தையும், தமிழ் மண்ணையும் நேசிப்பது, ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிந்தது.

முதல்வர் ஸ்டாலினின் பேச்சு, தி.மு.க., மேடையில் பேசுவது போல் இருந்தது. ‘தமிழக வளர்ச்சியானது, பொருளாதாரத்தில் மட்டும் அல்லாது, சமூக நீதி சிந்தனையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி’ என்று, அவர் தெரிவித்தார். அவரின் அமைச்சரவையில் உள்ள ராஜகண்ணப்பன், அதிகாரியை ஜாதியை சொல்லி திட்டினார்.தி.மு.க., – எம்.பி.,க்கள் தயாநிதி, டி.ஆர்.பாலு, ‘நாங்கள் என்ன தீண்டத்தகாதவர்களா’ என்று, ஏற்கனவே கூறியுள்ளனர். இதையும் பிரதமரின் மேடையில், ஸ்டாலின் பேசியிருக்க வேண்டும். தி.மு.க.,வின் உண்மையான சமூக நீதி, பிரதமருக்கு தெரிந்திருக்கும்.

பிரதமர் இருந்த மேடையில், சமூக நீதிக்கு இலக்கணமாக, மத்திய இணை அமைச்சர் முருகன் அமர்ந்திருந்தார். ஏழ்மையில் இருந்து வந்த முருகனுக்கு, பிரதமர் தன் அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளார்; இது தான் சமூக நீதி.மத்திய வருவாயில் இருந்து தமிழகத்திற்கு, 1.21 சதவீதம் தான் தருவதாக, முதல்வர் பேசினார். 2021 – 22ல், மத்திய அரசு மொத்தமாக வசூலித்த, 7.40 லட்சம் கோடி ரூபாயில், தமிழகத்திற்கு 70 ஆயிரத்து, 189 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதனால், 9.44 சதவீதம் வருவாய், தமிழகத்திற்கு வந்துள்ளது. முதல்வர் பொய் பேசுகிறார்.தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2009 – 14 வரை, தமிழகத்திற்கு, 62 ஆயிரத்து, 615 கோடி ரூபாய் தான் வந்தது. பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி., வரி நிலுவை, 6,500 கோடி ரூபாய் என, நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

ஆனால் முதல்வர், 14 ஆயிரத்து, 6 கோடி ரூபாய் என்கிறார்; எது உண்மை? தமிழகத்திற்கு வரும் நிதியை, பிரதமர் தடுப்பது போல் முதல்வர் பொய் பேசுகிறார்.புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த, அரசு ஊழியர்களிடம் இருந்து வசூலித்த பணத்தை, பி.எப்.ஆர்.டி.ஏ., அமைப்பில் ‘டிபாசிட்’ செய்ய வேண்டும். தமிழக அரசு, புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் வசூலித்த, 10 ஆயிரத்து, 436 கோடி ரூபாயை, டிபாசிட் செய்யாமல் உள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில், பா.ஜ., நல்ல முடிவை எடுக்கும். ஸ்டாலின் அரசியல் என்பது கும்மிடிப்பூண்டி முதல் கோபாலபுரம் வரை தான். ஆனால், பிரதமர் மோடியின் அரசியல், இந்தியாவை தாண்டி உலக அரசியலுக்கு சென்று விட்டது. தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, 31ம் தேதி கோட்டை நோக்கி நடைபயணம் நடத்தப்படும். சினிமா குத்தகை, பொங்கல் பரிசு தொகுப்பு, மின்சாரம் கொள்முதல் என, பல ஊழல்கள் நடந்துள்ளன. இது தான் திராவிட மாடல் அரசின் சாதனை. ஜூன் முதல் வாரத்தில், தி.மு.க., அரசின், 100 கோடி ரூபாய், 120 கோடி ரூபாய் என, இரு ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட உள்ளேன். இதனால், அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம்.அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு துறை வாரியாக, அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version