பா.ஜ., தேசிய தலைவர் நட்டா மீதான தாக்குதலை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எழுந்துள்ளது.

இந்த நிலையில் டிச., 19 அன்று 2 நாள் பயணமாக
உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் செல்ல உள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசார திட்டத்தை வகுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த நவ., மாதம் மேற்கு வங்கம் சென்றார். அவரும் நட்டாவும் ஒவ்வொரு மாதமும் மாநிலத்திற்கு வருகை தருவார்கள் என்று கட்சி முன்பு அறிவித்திருந்தது. அதன் படி இம்மாதம் நட்டா 2 நாள் பயணமாக புதனன்று மேற்கு வங்கம் சென்றார்.

நேற்று முன்தினம், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொகுதியான டைமன்ட் ஹார்பர் பகுதிக்கு சென்றார். அப்போது அவரது கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கட்சியின் மாநில பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்கியா, மாநில தலைவர் திலீப் கோஷ் உள்ளிட்டோரின் வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்திற்கு அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கை காக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தருமாறு கவர்னர் ஜக்தீபிடம் உள்துறை அமைச்சகம் கேட்டது. மாநில உள்துறை செயலர், டி.ஐ.ஜி ஆகியோரை டில்லிக்கு நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் கூறியுள்ளது.

“முதலமைச்சர், காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தை எச்சரித்த போதும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நிலைமை ஆபத்தானது என்று நான் கருதுகிறேன். இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளேன்.” என்று கவர்னர் தெரிவித்த்துள்ளார்.

இதற்கிடையே அமித்ஷாவிடம் பேசிய கட்சியின் முக்கிய தலைவரான முகுல் ராய், அரசியலமைப்பின் 356 வது பிரிவின் கீழ் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவரிடம் டிச., 19 மற்றும் 20 தேதிகளில் தான் மேற்கு வங்கத்தில் இருப்பேன் என கூறியுள்ளார்.

அதற்கான அட்டவணை விரைவாக இறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Exit mobile version