‘அக்னிபத்’ திட்டத்தால் இளைஞர்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன..

மத்தியில் பாஜக அரசு பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்றபின் பல அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது அதுபோல்,தற்பொழுது ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜூன் 14ம் தேதி அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர்.

அக்னிபத் திட்டம் தேசபக்தி மற்றும் திறமைமிக்க இளைஞர்களுக்கு ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் நான்கு ஆண்டுகள் பணியில் இருப்பர். அதன் முடிவில் அவர்களுக்கு 10 – 12 லட்ச ரூபாய் வரை வரிப் பிடித்தம் இல்லாமல் வழங்கப்படும். அத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரி அந்தஸ்துக்கு கீழ் உள்ள பதவியில் இவர்கள் நியமிக்கப்படுவர். நான்கு ஆண்டு காலப் பணியில் முதல் ஆறு மாத காலம் பயிற்சி காலமாகும். பயிற்சி முடித்த பின் மூன்றரை ஆண்டுகளுக்கு ராணுவம் விமானப்படை கடற்படை என முப்படைகளில் ஒன்றில் பணியாற்ற நியமிக்கப்படுவர்.நான்கு ஆண்டுக்குப் பின்


நான்கு ஆண்டுகள் முடிந்த பின் இவர்களின் 25 சதவீதம் பேர் திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ராணுவத்தில் பணியாற்ற மீண்டும் பணியில் அமர்த்தப்படுவர்.இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கான வயது வரம்பு 17.5 – 21 ஆக முதலில் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 23 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு மாதம் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். எனினும் இதில் மாதம் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். பிடிக்கப்படும் தொகைக்கு சமமான தொகையை அரசு வழங்கி அதை சேவா நிதி திட்டத்தின் கீழ் சேமித்து வைக்கும்.நான்கு ஆண்டு பணி காலம் முடிந்த பின் 10 லட்ச ரூபாய் முதல் 12 லட்ச ரூபாய் வரையிலான தொகை வழங்கப்படும்.

மேலும் நான்கு ஆண்டு கால பணிகாலத்தில் அக்னிவீரர்களுக்கு 40 லட்ச ரூபாய்க்கு இலவச ஆயுள் காப்பீடும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தால் இளைஞர்கள் குறுகிய காலம் ராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். தற்காலிகமாக ராணுவத்தில் சேவை செய்துவிட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம். கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் முப்படைகளுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்கள் தேர்வு நடத்தப்படவில்லை. வீரர்கள் பற்றாக்குறையை சரி செய்யும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினால் வேலைவாய்ப்பின்மை பிரச்னையும் குறையும்.

நான்கு ஆண்டுகால பணியில் அக்னி வீரர்களுக்கு பலவிதமான ராணுவ பயிற்சிகள் அளிக்கப்படும். அத்துடன் ஒழுக்கம் கட்டுப்பாடு தேசபக்தி தைரியம் தலைமை பண்பு ஆகியவற்றை கற்கவும் வாய்ப்பு கிடைக்கும். நான்கு ஆண்டு கால பணிக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் அக்னிவீரர்கள் சமூகம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பர்.
பணி முடிவு காலத்தில் வழங்கப்படும் 10 – 12 லட்ச ரூபாயில் ஒரு லட்ச ரூபாய் மட்டும் ரொக்கமாக பெற்றுக் கொண்டு மற்ற பணத்தை வங்கி பத்திரமாக பெற்றுக் கொள்ளலாம். இதை வைத்து வங்கிகளில் கடன் வாங்கி சுய தொழில் துவங்க முடியும்.

நான்கு ஆண்டு பணிக்கு பின் ராணுவத்தில் பணியாற்ற தேர்வு பெறுவோர் தற்போதுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகள் படி 15 ஆண்டுகளுக்கு பணியாற்றலாம். அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்கள் முப்படைகளில் தனி பிரிவாகவே செயல்படுவர். நான்கு ஆண்டு பணிக்கு பின் முப்படைகளில் நிரந்தரமாக பணியாற்ற அவர்கள் விண்ணப்பிக்கலாம். தற்போது ராணுவத்துக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் நடத்தப்படுவது போலவே அக்னிவீரர்கள் தேர்வுக்கான முகாம்கள் நடத்தப்படும். அதேபோல் தற்போது ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படுவோருக்கான தகுதிகளே அக்னி வீரர்களுக்கும் கடைப்பிடிக்கப்படும்.ராணுவ சீருடை அணிந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை கனவு அனைத்து இளைஞர்களிடமும் உள்ளது. அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அக்னிபத் திட்டம் அமைந்துள்ளது.

நன்றி தினமலர்.

Exit mobile version